‘நான் அவன் இல்லை’ பாணியில் நடந்த சம்பவம்… 6 இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் ; 7வது திருமணத்திற்கு வாலிபர் போட்ட திட்டம் முறியடிப்பு
Author: Babu Lakshmanan30 December 2023, 2:55 pm
திருப்பூரில் தனியாக வசித்து வந்த 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் மீது கைக்குழந்தையுடன் பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் தேவி (வயது 28). திருமணமான இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். மேலும் கணவரை விவாகரத்து செய்யவும் முடிவு செய்தார். இந்த நிலையில் தேவிக்கு திருப்பூரில் எலக்ட்ரீஷியனாக பணி புரியும் குணசேகரன் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, குணசேகரன் தேவியிடம் ,கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கான உதவிகளை செய்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
மேலும் ஆசைவார்த்தைகள் கூறி தேவியை குணசேகரன் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, 2 பேரும் 3 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்தனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில், குண சேகரன் நடவடிக்கையில் தேவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர் விசாரணை நடத்திய போது, குணசேகரன் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து குணசேகரனிடம் தட்டிக்கேட்டார். இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் குணசேகரனும், அவரது தாயும் சேர்ந்து தேவியை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த தேவி, தனது வாழ்க்கை போல் மற்ற பெண்களின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குணசேகரன் 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம், நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
திருப்பூரில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்த குணசேகரன் பல்வேறு இடங்களுக்கு பணிக்கு சென்று வந்துள்ளார். அப்போது திருப்பூரில் தனியாக வசித்து வரும் ஆதரவற்ற பெண்கள், விதவை பெண்களிடம் நெருங்கி பழகியதுடன், அவர்களிடம் தனது விசிட்டிங் கார்டை கொடுப்பதுடன், அந்த பெண்களின் செல்போன் நம்பர்களை வாங்கி வைத்து கொண்டு பேசி வந்துள்ளார்.
இதில் அவரிடம் மயங்கிய பெண்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று வந்துள்ளார். இதனிடையே கேரளாவை சேர்ந்த வனிதா என்ற பெண்ணை குணசேகரன் முறைப்படி திருமணம் செய்தார். அவர் மூலம் ஒரு குழந்தையும் உள்ளது. முதல் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை பிரிந்த குணசேகரன், அதன்பிறகு 2017ம் ஆண்டு திருப்பூர் பெருமாநல்லூரை சேர்ந்த கனகா என்பவரை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்துள்ளார்.
பின்னர் 2019ம் ஆண்டு கோவையை சேர்ந்த செல்லம்மாள், 2020ம் ஆண்டு விழுப்புரத்தை சேர்ந்த சசிகலாவை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து திருப்பூரை சேர்ந்த காளீஸ்வரி, தேவியை திருமணம் செய்துள்ளார். மொத்தம் 6பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.
ஒவ்வொருவருடன் 2, 3 ஆண்டுகள் வாழ்ந்த குணசேகரன் பின்னர் அந்த பெண்களை ஏமாற்றியதுடன், நகை, பணத்தையும் பறித்துக்கொண்டார். 7வதாக சிவகங்கையை சேர்ந்த கல்லூரி மாணவி சினேகா என்பவருடன் பேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளார். அவரை திருமணம் செய்வதற்காகவே தேவியை வீட்டை விட்டு விரட்டியுள்ளார். இந்தநிலையில், தேவி போலீசில் புகார் செய்யவே, சினேகா, குணசேகரன் பிடியில் இருந்து தப்பியுள்ளார்.
இல்லையென்றால் அவரையும் குணசேகரன் திருமணம் செய்திருப்பார்.
6 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய குணசேகரன், தன் மீது எந்த பெண்களும் புகார் தெரிவிக்காத வகையில், மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு 5 பெண்களையும் பிரிந்துள்ளதுடன், பல லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தையும் அவர்களிடம் இருந்து பறித்து கொண்டார். ஆனால் 6வதாக திருமணம் செய்த தேவி மற்ற பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு துணிச்சலுடன் குணசேகரன் மீது புகார் தெரிவித்து அவரை சிக்க வைத்துள்ளார்.
இல்லையென்றால் குணசேகரன் இன்னும் ஏராளமான பெண்களை திருமணம் செய்து அவர்களின் வாழ்க்கையை சீரழித்து இருப்பார். குணசேகரனை கைது செய்யும் விசாரிக்கும் பட்சத்தில் இன்னும் அவர் எத்தனை பெண்களை ஏமாற்றியுள்ளார் என்ற விவரம் தெரியவரும். இதனால் குணசேகரனை கைது செய்யும் நடவடி க்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். 6 பெண்களை ஏமாற்றி வாலிபர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்யாண மன்னனான குணசேகரன் திருமணம் செய்த 6 பெண்களின் பெயர்களையும் தனது கையில் பச்சை குத்திக்கொண்டார். ஒவ்வொரு பெண்களையும் திருமணம் செய்யும் போது அந்த பெண்கள் கைகளில் குத்தியுள்ள பெயர் குறித்து கேட்கும் போது. அந்த பெயர்கள் தனது தங்கை பெயர், அண்ணன் மகள் பெயர் என கூறியுள்ளார்.
மேலும். திருமணம் செய்த பெண்களை ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு அழைத்து சென்று ஜாலியாக இருந்துள்ளார். செலவுக்கு திருமணம் செய்த பெண்களின் நகை, பணத்தையே பயன்படுத்தி உள்ளார். குணசேகரனின் தாய் கூறும் போது, எனது மகன் யாரையும் ஏமாற்ற வில்லை. அவனை திருமணம் செய்த பெண்கள்தான் ஏமாற்றியுள்ளனர் என்றார்.