குப்பையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை உயிரிழப்பு… கள்ளக்காதலி செய்த செயலா..? போலீசார் விசாரணை
Author: Babu Lakshmanan2 January 2024, 3:57 pm
கும்மிடிப்பூண்டி அருகே குப்பையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் பாதிரிவேடு கிராமத்தில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே உள்ள குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுள்ளது. இதனை அங்குள்ள தூய்மை பணியாளர்கள் தூய்மைப் பணிக்காக செல்லும்போது பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிறந்து சில மணி நேரமான அந்த குழந்தையை மீட்ட பாதிரிவேடு போலீசார் உடனடியாக மாதர்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிருடன் இருப்பதை உறுதி செய்த பின்னர், அங்கிருந்து திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, செல்லும் வழியில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கள்ளத்தொடர்பால் பிறந்த குழந்தையா? அல்லது பெண் குழந்தை என்பதால் குப்பை தொட்டியில் வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.