ஜல்லிக்கட்டு மைதானத்தை யாரு கேட்டா? வாடிவாசலுக்கு மூடுவிழா? ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan4 January 2024, 10:29 am
ஜல்லிக்கட்டு மைதானத்தை யாரு கேட்டா? வாடிவாசலுக்கு மூடுவிழா? ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு!!
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நமது முன்னோர்களின் வார்த்தை அதனைத் தொடர்ந்து நமது பண்பாடு, பாரம்பரியம், நாகரிகத்தின், வீரத்தின் அடையாளமாக ஜல்லிக்கட்டு திகழ்ந்து வருகிறது.
உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய ஜல்லிக்கட்டு வாடிவாசல் வழியாக திறக்கப்பட்டு இளம் சிங்கங்கள் பங்கேற்கும் விளையாட்டு போட்டியாக சிறப்பாக நடைபெற்று வந்தது.
ஆனால் தற்போது தமிழர்கள் கடைப்பிடித்து வரக்கூடிய வாடிவாசலுக்கு மூடு விழா நடத்தப்படுமா? என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். பொதுவாக கிராமங்கள் தோறும் வாடிவாசல் வழியாக குல தெய்வங்களை வழிபட்டு காளைகளை அவிழ்த்து விடுவார்கள்.இந்த ஜல்லிக்கட்டு வீரத்தின் அடையாளம் தான், கண்காட்சி கூடம் அல்ல.
கிராமங்கள் தோறும் மண்வாசனை மிக்க இந்த ஜல்லிக்கட்டு போட்டியை, மக்களின் கருத்தை கொள்ளாமல், கிராமம் தோறும் வாடிவாசலுக்கு மூடு விழா கண்டு விடாதீர்கள் என மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டுக்கு மைதானம் எந்த நாட்டிலும் கிடையாது. இந்த புத்திசாலித்தனமான முடிவை யார் கூறியது என்று தெரியவில்லை இல்லாத ஒன்றை உருவாக்க கூடாது.
ஜல்லிக்கட்டு மைதானம் என்று இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்கி, ஏதோ கலாச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மறைமுகமாக ஒரு முயற்சி நடைபெறுகிறதோ என்கிற ஒரு அச்சம் ஏற்படுகிறது.
எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது அலங்காநல்லூர் வாடி வாசலில் தனது பொற்கரங்களால் பச்சைக்கொடியை அசைத்து துவக்கி வைத்தார்.இதன் மூலம் ஒரு முதலமைச்சர் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்த வரலாற்றை உருவாக்கினார் அதனைத் தொடர்ந்து நீதிமன்ற நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டு போட்டியை சிறப்பாக நடத்திக் காட்டினார்.
திமுக தேர்தல் அறிக்கையில் காளை வளர்ப்பு பராமரிப்பு செலவுக்காக, ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். இன்னும் நிலுவையிலே இருக்கிறது அதை கொடுத்து காளை வளர்ப்பதற்காக ஊக்கப்படுத்தி இருக்கலாம்.
ஆனால் அவர்கள் யாருமே கேட்காத, யாருமே விரும்பாத இந்த மைதானம் அமைத்திருப்பது திணிக்கப்படுகிற திட்டமாக இருக்கிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம் நிலுவையில் இருப்பதை அரசு கவனத்தில் எடுத்து கொண்டு ஆயிரம் ரூபாய் அறிவிக்க திமுக அரசு முன் வருமா?
வீரம் செழிந்த இந்த வீர விளையாட்டு ஜல்லிக்கட்டை காப்பாற்றுவதற்கும், ஒவ்வொரு கிராமத்தின் மண்வாசனையான பாரம்பரியத்தை காப்பாற்றுவதற்கு அரசு முன்னு வருமா? அல்லது கிராம மண்வாசனை பாரம்பரியத்தின் பண்பாட்டையும் குழி தோண்டி புதைத்து விட்டு, சர்வாதிகார போக்கிலே பொம்மை விளையாட்டாக ஜல்லிக்கட்டை இந்த மைதானத்தில் நடத்தி அதற்கு ஒரு காரணமாக அமையுமா என்கிற சந்தேகத்தோடு, இந்த அரசு என்ன செய்யப் போகிறதோ அந்த அச்சத்தோடு வாழுகிற நம்முடைய உலகத் தமிழர்களுக்கு நீங்கள் எடுத்திருக்கிற நடவடிக்கையில் முழு விவரத்தை வெளியிட முன்வருமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.