கிளாம்பாக்கம் பேருந்து நிலைய டெண்டரில் முறைகேடு… ரூ. 50 கோடி ஜாக்பாட்…? 2 அமைச்சர்கள் மீது சவுக்கு சங்கர் ஊழல் புகார்…!!

Author: Babu Lakshmanan
4 January 2024, 7:01 pm

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பராமரிப்புக்கான டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர்கள் மீது பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் ஊழல் புகார் அளித்துள்ளார்.

சென்னை மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் சுமார் ரூ.394 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. உதய சூரியன் வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் திறந்து வைத்தார்.

இந்தப் பேருந்து நிலையம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு சிரமங்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பராமரிப்புக்கான டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் ஊழல் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை 15 ஆண்டுகளுக்கு பராமரிப்பதற்கான டெண்டரில் பிவிஜி எனும் நிறுவனம் மட்டுமே பங்கேற்றுள்ளது. ஒரு டெண்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளவில்லை எனில், டெண்டர் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதே விதி. ஆனால் இந்த டெண்டர் வெளிப்படையாக நடத்தாமல், பிவிஜி என்ற ஒரே நிறுவனத்திற்கு ரகசியமான முறையில் டெண்டரை தந்தது மட்டுமின்றி அவசர அவசரமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்துள்ளனர்.

மேலும் டெண்டர் வழங்கியதற்கான கடிதத்தை சிஎம்டிஏ பிவிஜி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. அதில் ஒப்பந்தத் தொகையாக 30 கோடி வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பிவிஜி நிறுவனம் 2.40 கோடியை ஆண்டு தோறும் சிஎம்டிஏவுக்கு செலுத்துகிறது. ஆனால் பிவிஜி நிறுவனத்திற்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கிறது.

இந்த ஊழலில் சிஎம்டிஏ அமைச்சர் சேகர்பாபு, போக்குவரத்த்துறை அமைச்சர் சிவசங்கர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் அன்சூல் மிஸ்ரா, நிதித்துறை கூடுதல் செயலர் பிரகாஷ் வடநாரே ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை மனு அளித்துள்ளேன்.

திமுக அரசின் கீழ் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுவதால், இதனை அவர்கள் விசாரிக்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும். இன்னும் இரண்டரை வருடங்கள் தான் அவர்களின் ஆட்சி. நாளை ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் நிச்சயம் இது விசாரிக்கப்படும். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவேன், எனக் கூறினார்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 553

    0

    0