விறுவிறுப்பாக நடந்த தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி.. 12 காளைகளை அடக்கிய காளையருக்கு பல்சர் பைக் பரிசு!

Author: Udayachandran RadhaKrishnan
6 January 2024, 4:48 pm

விறுவிறுப்பாக நடந்த தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி.. 12 காளைகளை அடக்கிய காளையருக்கு பல்சர் பைக் பரிசு!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்றது. இந்த போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் இன்று காலை தொடங்கி வைத்தனர்.

பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மக்கள் நேரில் சென்று கண்டுகளித்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகளும், 297 மாடுபிடி வீரர்களும் களமிறங்கினர்.

இந்த நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த ஆண்டுக்கான முதல் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றுள்ளது. தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 571 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. இதில், தமிழ்செல்வனுக்கு சொந்தமான காளை முதல் பரிசை தட்டி சென்றது.

இதுபோன்று, தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் அதிகபட்சமாக 12 காளைகளை அடக்கிய ராயமுண்டான் பட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர் சுகேந்த் என்பவர் முதல் பரிசை பெற்றார். முதலிடம் பிடித்த காளைமாட்டின் உரிமையாளர் தமிழ்செல்வன், மாடுபிடி வீரர் சுகேந்த்திற்கு முதல் பரிசாக பல்சர் பைக் வழங்கப்பட்டது.

தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற 41 பேர் காயமடைந்துள்ளனர். இந்த 41 பேரில் படுகாயமடைந்த 8 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

  • good bad ugly movie special screening for ladies பெண்களுக்கு மட்டுமே திரையிடப்படும் குட் பேட் அக்லி திரைப்படம்! அதிரடி காட்டிய பிரபல திரையரங்கம்…