முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது பெரிதல்ல.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் தமிழிசை அட்வைஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan7 January 2024, 1:57 pm
முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது பெரிதல்ல.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் தமிழிசை அட்வைஸ்!!
கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர் சந்திப்பு.
தமிழகத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. பாரத பிரதமர் பல வெளிநாடுகளுக்கு சென்று ஏற்படுத்திய நல்லுறவும் பாரத தேசம் தொழில் முனைவோர்களுக்கு ஏற்ற தேசமாக இருக்கிறது என்ற நம்பிக்கையிலும் தான் தொழில் முனைவோர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள்.
அதேபோல் இதற்கு முந்தைய முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அதில் எவ்வளவு தொழில் முனைவோர்கள் கிடைத்தார்கள், மக்களுக்கு எவ்வளவு பலன் தந்தது, எந்தெந்த நாடுகள் தொழிற்சாலையை ஆரம்பித்தார்கள் இதைப் பற்றிய விவரங்கள் முழுவதுமாக தெரியவில்லை.
எனவே மாநாடு நடத்துவது பெரிதல்ல எந்த அளவிற்கு அது வெற்றிகரமாக நடக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
முதலீட்டாளர்கள் வரும்பொழுது அனைத்து பகுதிகளுக்கும் தென்பகுதிகள் உட்பட கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மாநிலத்தை மட்டுமே நினைத்து தொழில் முதலீட்டாளர்கள் வருவதில்லை.
நாட்டின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். பாரத தேசத்திற்குள் இருக்கும் ஒரு மாநிலம், நமது மாநிலத்தை சேர்ந்த நிதி அமைச்சர் ,தொழில் துறை அமைச்சர் போன்றவர்கள் சேர்ந்து தொழில் தொடங்க வாருங்கள் என்று கோரிக்கை வைத்திருந்ததன் பெயரில் முதலீட்டாளர்கள் வருகிறார்கள்.
நாட்டின் மீது நம்பிக்கை என்பதே முதலில்.அதற்கு பிறகு தான் நாட்டில் உள்ள மாநிலத்திற்கு வரலாம் என்பது. பல மாநிலங்கள் அந்நிய முதலீட்டை ஈர்க்கிறார்கள். எனவே மத்திய அரசின் பங்கும் பாரத பிரதமரின் பங்கும் இதில் இருக்கிறது.
தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினை, மின் கட்டணத்தில் பிரச்சனை, வெள்ளத்தினால் பிரச்சனை உள்ளது. முதலீட்டாளர்களை ஈர்ப்பது நோக்கம் அல்ல அடிப்படை கட்டமைப்பை எப்படி சரி செய்து இருக்கலாம் என்பது முக்கியம்.
ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்கிறார்கள் என்றால் எந்த அளவிற்கு இயற்கை பிரச்சினை என்றாலும் அடிப்படை கட்டமைப்பு என்பது நாட்டில் இருக்க வேண்டும் எனவே அதில் கவனம் செலுத்த வேண்டும்.
பாரதப் பிரதமர் திருச்சிக்கு வந்து பிரம்மாண்டமான விமான நிலையத்தை திறந்து சென்றார்கள். அதன் மூலம் பல லட்சம் பேர் விமானத்தில் பயணம் செய்யலாம். ஆனால் விமான நிலையத்தால் என்ன பிரயோஜனம் என்று கேட்டவர்கள் சென்னைக்கு அருகில் அவ்வளவு பிரச்சினையுடன் பேருந்து நிலையத்தை திறந்துள்ளனர்.
எதையுமே முழுமை அடையாமல் தான் இந்த அரசு செய்து வருகிறது. கோவையில் கூட மக்களோடு முதல்வர் என்ற நிகழ்ச்சியை முதலமைச்சர் நடத்தினார்.
இதையே பாரத பிரதமர் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அதில் என்னென்ன மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு தேவையோ அந்த மத்திய அரசின் திட்டங்களினால் மக்களுக்கு பயனடைந்தவர்கள் பலனடைய வேண்டியவர்களுக்கு உடனே அனுமதி தந்தார்கள்.
மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு அருகாமையில் கொண்டு வருவது தான் அந்த திட்டங்கள்.இதுதான் மக்களோடு முதல்வர் திட்டம். மத்திய அரசின் அடிப்படைக் கொள்கை சார்ந்த திட்டங்களில் பெயர் மட்டும் தமிழக அரசால் மிகவும் ஈர்ப்புத்தன்மையோடு வைக்கப்படுகிறது என்பதே எனது கருத்து
வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு முதலமைச்சரே சென்று பார்க்கவில்லை. ஆனால் குஜராத்தை பற்றி பேசுகிறார்கள். விளம்பர விழாக்களில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள் என்பது தான் கவலை.
கலைஞர் 100 விழா நடந்திருக்கிறது. மேலும் 11 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை வந்திருக்கிறது. முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை செய்யாமல் எல்லாவற்றையும் நடக்க விட்டுவிட்டு மத்திய அரசு மீது பழி போட்டு விடலாம் என்ற எண்ணம் இருக்கிறது.
அதை அவர்கள் மாற்ற வேண்டும். அவர்கள் ஒன்றிய அரசு என்ற சொல்கிறார்கள். நீங்கள் 20 ஆண்டுகாலம் மத்திய அரசில் இருந்த பொழுது ஒன்றிய அரசில் இருந்தீர்களா அல்லது மத்திய அரசில் இருந்தீர்களா? அப்பொழுது ஏன் ஒன்றிய அரசு என சொல்லவில்லை.
கல்வியை மாநில அரசு பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பவர்கள் நீங்கள் இருக்கும் போது ஏன் செய்யவில்லை? இவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் மத்திய அரசின் மீது பழிபோட்டுக் கொண்டிருக்கிறார்கள் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ராமர் கோவில் திறப்பு விழாவில் அனைவருக்கும் பங்கு உண்டு.
அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.அதே வேளையில் யாரை அழைக்க வேண்டும் என்பது கமிட்டியைச் சார்ந்தது. அவர்கள் அனைவரையும் அழைப்பார்கள். இவரை அழைக்கவில்லை அவரை அழைக்கவில்லை என அரசியல் ஆக்க கூடாது.
குடியரசுத் தலைவரை மரியாதைக்குரிய தலைவராக பார்த்து தான் மத்திய அரசை நடத்திக் கொண்டிருக்கும் கட்சி தேர்ந்தெடுத்தது. குடியரசுத் தலைவராக வரக்கூடாது என்று நினைத்தவர்கள் தற்போது குற்றம் சாட்சி வருகிறார்கள்.
குடியரசுத் தலைவராக வரக்கூடாது என்று நினைத்தவர்கள் குடியரசு தலைவரை வைத்து அரசியல் செய்கிறார்கள். மரியாதைக்குரிய குடியரசுத் தலைவருக்கு என்னென்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதனை நாடு கொடுத்துக் கொண்டிருக்கிறது.
மதச்சார்பின்மையை கடைபிடிக்கிறோம் என்று சொல்லி இந்து மத துவேஷத்தை கடைபிடிப்பது தான் தமிழகத்தின் ஸ்டாலினாக இருந்தாலும் கேரளா பினராயி யாக இருந்தாலும் கடைபிடிக்கிறார்கள்.
ஐயப்ப சுவாமியை பார்க்க வேண்டும் என்று செல்லும் ஐயப்ப பக்தர்கள் பலர் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் அங்கு செல்லக்கூடிய பக்தர்களுக்கு தண்ணீர் கூட கொடுப்பதில்லை. குடிக்க வேண்டும் என்றால் குளிர்பானங்களை பணம் கொடுத்து வாங்கி குடிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
சரியான ஏற்பாடுகள் செய்யவில்லை என்றால் வரக்கூடிய கூட்டம் குறைந்துவிடும் என்ன அந்த மாநில அரசு நினைக்கிறது.,ஆனால் கூட்டம் அதிகமாகி கொண்டு தான் இருக்கும். அவர்களுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
மழை எவ்வளவு வரும் என தெரியாது என இந்த அரசு சொல்கிறது இவ்வளவு பக்தர்கள் வருவார்கள் என தெரியாது என அந்த மாநில அரசு சொல்கிறது. அரசாங்கம் என்பது எத்தனை பேர் வருகிறார்கள் என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கேட்பதற்கு அவரது ரசிகர்களுக்கு முழு உரிமை உள்ளது. விஜயகாந்த் மீது எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல பிரதமருக்கே அவர் மீது நல்ல மரியாதை இருப்பதால்தான் அவருக்கென தனி கட்டுரை எழுதி இருக்கிறார்.