சீமானுக்கு பதில் சொல்ல முடியாது… வாய் வார்த்தைக்கு பேசுகிறார் அமைச்சர்.. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சனம்!
Author: Udayachandran RadhaKrishnan7 January 2024, 8:14 pm
சீமானுக்கு பதில் சொல்ல முடியாது… வாய் வார்த்தைக்கு பேசுகிறார் அமைச்சர்.. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சனம்!
கோயம்புத்தூர் எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் ‘அகண்ட தமிழ் உலகம்’ அமைப்பின் நான்காவது சர்வதேச மாநாடு கடந்த 5 ஆம் தேதி முதல் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற நிறைவு நாள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மத்திய தகவல் ஒளிபரப்பு, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொண்டு சிரைப்புறையாற்றினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர், ‘அகண்ட தமிழ் உலகம் அமைப்பின் 4வது மாநாட்டில் தமிழ் மொழி பற்றியும், தமிழ் கலாச்சாரத்தை பற்றியும், வணிகத்தை பற்றியும் பேசப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சி அளித்தது.உலகில் எங்கு சென்றாலும் திருக்குறள் குறித்து பிரதமர் பேசுகிறார். காசி தமிழ் சங்கமம் மற்றும் சௌராஷ்ட்ரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
ஐநா சபையில் கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகள் மோடி அவர்களால் குறிப்பிடப்பட்டது. இவ்வாறு பல்வேறு வகையில் பிரதமர் மோடி தமிழ் மொழிக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் பெருமை சேர்த்து வருகிறார்.
தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்கள் மத்திய அரசு சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் மாநாடு என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை இங்கு செய்து கொடுக்க வேண்டும்.
தொழில் தொடங்குவதற்கான எளிமையான மற்றும் வெளிப்படைத்தன்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தமிழக அரசின் கடமையாகும்.
ஏற்கனவே போர்டு நிறுவனம் தமிழகத்தில் இருந்து வெளியே சென்றது. அதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இழந்து பாதிப்படைந்தனர். இதுபோல் அல்லாமல் தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்குள் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என பாஜக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மூன்று சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை மின் கட்டண கொள்ளை என்று தான் பார்க்க வேண்டும்.
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் மின் கட்டணத்தை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்.சீமானுக்கு பதில் சொல்ல வேண்டிய காலத்தில் இல்லை.
பிரதமர் தமிழக மக்கள் மீது எவ்வளவு அக்கறை வைத்துள்ளார் என்பது மக்களுக்குத் தெரியும். தமிழ் மொழி குறித்து அவரைப் போன்று இங்கு யாரும் பெருமையாக பேசவில்லை. அவருக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை.
சபரிமலையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என நாடாளுமன்றத்தில் பாஜக சார்பில் பதிவு செய்துள்ளோம். கேரள அரசின் முற்றிலும் தவறான அணுகுமுறையை செய்கிறது. குடிநீர், கழிப்பிடம் என எந்த அடிப்படை வசதியும் பக்தர்களுக்கு அங்கு செய்யப்படவில்லை.
வெள்ள நிவாரண பணிகள் தமிழகத்தில் நடந்த போது இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். போகிற போக்கில் பிரதமரை சந்திப்பது வெள்ள நிவாரணம் கேட்பதா?
மத்திய அரசு, மத்திய அரசின் ஏஜென்சிகள் முன்னெச்சரிக்கை விட்டும், வெள்ள நிவாரண பணிகளில் களத்தில் இருந்த போது கூட்டணி குறித்து அவர் பேசச் சென்றார். கூடலூர் பகுதியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு பாதிப்பு இல்லாமல், மக்களின் உயிரை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுக்க வேண்டும்.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு பாஜக சார்பில் மக்களை அழைத்துச் செல்வோம் எனக் கூறிய பின்பு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அவர்களும் அழைத்துச் செல்வதாக ஒரு வெற்று அறிக்கையை கூறியுள்ளனர்.
ராமர் கோவில் விழாவுக்கு குடியரசு தலைவர் அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு, நிகழ்ச்சி அன்று தான் யார் யார் அழைக்கப்பட்டு உள்ளார்கள் என தெரியும். கோவில் நிர்வாகத்தினர் அதனை முடிவு செய்து அழைப்பார்கள்’ என தெரிவித்தார்.