அதிமுக பிரமுகரின் மகன் கண்டம் துண்டமாக வெட்டி கொடூரக்கொலை… கஞ்சா போதையில் நடந்த சம்பவம் ; போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
8 January 2024, 4:37 pm

காஞ்சிபுரம் அருகே அதிமுக கிளை கழக செயலாளரின் பட்டதாரி மகன் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாலுகா காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப் – காந்தாம்மணி தம்பதிகள். போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற இவர், அதிமுக கட்சியில் கிளை செயலாளராக உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூன்று மகன்களும் மேற்பட்டப்படிப்பு படித்து விட்டு பிடித்த வேலையில் அமர்ந்துள்ளார்கள்.

மூத்த மகன் ஆனந்தன் (31) MA, M.Ed, M.Phill படித்து விட்டு அரசாங்க உத்தியோகம் கிடைக்காததால், கடந்த 7 ஆண்டுகளாக செட்டியார்பேட்டை பகுதியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகராக செயல்பட்டு, எல்எல்ஆர், லைசன்ஸ் பெற்று தருதல், வாகனங்களுக்கான எப்சி புதுப்பித்தல் போன்ற பணிகளை கமிஷன் அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று இரவு வீட்டில் இருந்த ஆனந்தனுக்கு செல்பேசி அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. இதனையடுத்து, தான் வெளியில் சென்று வருவதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு, தனது தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காரப்பேட்டை பகுதியில் மூடியிருந்த டிபன் கடைக்கு வந்துள்ளார். அங்கு அமர்ந்து தனது நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை ஆனந்தன் வெட்டு காயங்களுடன் அங்கு சடலமாக இருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ஆனந்தனின் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து முதற்கட்ட விசாரணையில், ஆனந்தனின் நண்பர்கள் உணவகத்தில் உணவு அருந்தி கொண்டிருந்த போது, சில மர்ம நபர்கள் கஞ்சா புகைத்து மற்றும் மதுபானம் அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. அதனை ஒட்டியே ஆனந்தனை கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி உள்ளனர்.

பிரபல மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் போன்ற மிக முக்கியமான ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பட்டதாரி வாலிபரை நெடுஞ்சாலை ஓரத்திலேயே உள்ள உணவகத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் மிக பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

மேலும், சம்பவ இடத்தில் டிபன் கடையின் மேஜையின் மீது “கஞ்சா புகைத்த” துண்டும், மது பாட்டில்களும், சிகரெட் வஸ்துகளும், பிஸ்கெட் பாக்கெட்களும் இருந்த நிலையில், ஆனந்தன் தனது நண்பர்களுடன் மது அருந்திய போது, ஏதேனும் வாக்குவாதம் ஏற்பட்டு கொலை நடந்திருக்க கூடுமா? அல்லது முன் பகை காரணமாக கொலை நடந்திருக்க கூடுமா? அல்லது கஞ்சா புகைத்த நபர்கள் போதையில் ஆனந்தனை கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டந்துண்டமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஆனந்தனின் சடலம் இருந்த உணவகத்தின் வெளியே ரத்தம் அதிகமாக தேங்கியிருந்தது. அதனை தடய அறிவியல் துறையினர் சேகரித்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு ADSP மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றார்கள் .மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றார்கள்.

ஏற்கனவே இதே பகுதியில் இரண்டு கொலைகளும், ஒரு கொலை முயற்சியும் நடைபெற்றும் தாலுக்கா காவல்துறையினரோ , எஸ்பியின் கீழ் பணிபுரியும் உளவுத்துறையினரோ இதைக் கண்டு கொள்ளாமல் விட்டதால்தான், ஒரு பட்டதாரி இளம் வாலிபர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் நடந்தேறியுள்ளது என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட தூரம் வரை ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய பேட்ரோல் வாகன காவல்துறையினர் ரோந்து பணியை சரியாக செய்திருந்தால், இது போன்ற அசம்பாவிதம் நடந்துக்காது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

  • AR Rahman and Mohini Dey ஏ.ஆர்.ரஹ்மான் யார் தெரியுமா? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகினி டே
  • Views: - 503

    0

    0