அன்று VIOLENT.. இன்று SILENT : தமிழக அரசுக்கும் அதானிக்கும் என்ன டீல்? அறப்போர் கிளப்பிய சந்தேகம்!
Author: Udayachandran RadhaKrishnan9 January 2024, 8:27 am
அன்று VIOLENT.. இன்று SILENT : தமிழக அரசுக்கும் அதானிக்கும் என்ன டீல்? அறப்போர் கிளப்பிய சந்தேகம்!
உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டில் அதானி குழுமம் மொத்தம் ரூ.42,768 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் 10,300 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் ரூ.24,500 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதேபோல் அதானியின் அம்புஜா சிமெண்ட் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதேபோல் அதானி கனெக்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ13,200 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் தமிழகத்தில் ரூ.1,568 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கூட்டணி கட்சிகளான விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்குள் முணுமுணுப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. அதானியை எதிர்த்துதான் நாடாளுமன்றத்ல் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அதானி முதலீடுகள் குவித்துள்ளது பல்வேறு சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
முன்னதாக எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், காற்றாலை மின்சார ஊழல், நிலக்கரி கொள்முதல் ஊழல் என மெகா ஊழல்களின் நரக பூமியாக தமிழ்நாடு மின்சார வாரியத்தை மாற்றிவிட்டு தற்போது டெண்டரே விடாமல் அதானி போன்ற நிறுவனத்திடம் 150%க்கும் அதிகமான விலையில் நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முன்வந்திருப்பதன் காரணம் என்ன? என சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
இந்த பழைய ட்வீட்டை டேக் செய்து அறப்போர் இயக்கம் முகநூலில் விமர்சனம் செய்துள்ளது. அதில், தமிழக மின்சார வாரியத்தில் தரம் குறைவான நிலக்கரியை சந்தை விலையை விட அதிக விலையில் அதானி மற்றும் சில நிறுவனங்களுக்கு டெண்டர் செட்டிங் செய்ததால் 6000 கோடி ஊழல் நடந்ததாக அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரை அடுத்து, அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தனியாக அதானியின் நிலக்கரி ஊழல் குறித்த ஒரு புகாரை அன்றைய ஆளுநரிடம் கொடுத்தார்.
தற்பொழுது ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் ஆகி இரண்டரை வருடம் கடந்த நிலையில் இந்த ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த அனுமதி தராமல் முடக்கி வைத்துள்ளார். தமிழக முதலமைச்சருக்கும், தமிழக மக்களின் மின்சார கட்டண உயர்வுக்கு காரணமான அதானிக்கும் என்ன டீல் என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என பதிவிட்டுள்ளது.