ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க சொன்னதே மதுரை மக்கள்தான் : அமைச்சர் எ.வ.வேலுவின் திடீர் விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2024, 4:55 pm

ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க சொன்னதே மதுரை மக்கள்தான் : அமைச்சர் எ.வ.வேலுவின் திடீர் விளக்கம்!!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்தின் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு நவீன வசதிகளோடு தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றி பாதுகாக்கும் வகையில் ஜல்லிக்கட்டு அரங்கம் தற்போது 100 சதவீத பணிகள் நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது. இந்த மாதத்திற்குள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைப்பார்.

ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்த போது அதனை பல்வேறு வகையிலும் போராடி இன்றைக்கு நடைபெற காரணமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளோடும் கட்டுப்பாடுகளோடும் மதுரையில் ஜல்லிக்கட்டு விளையாட்டுகள் பாரம்பரியம் மாறாமல் நடைபெற்று வருகின்றன. அந்த அடிப்படையில் பொதுமக்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க கருணாநிதியின் பெயர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அனுமதியோடு சூட்டப்பட்டுள்ளது.

ஜனநாயக நாட்டில் மாற்று கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். ஆகையால் கருணாநிதியின் பெயர் சூட்ட எதிர்ப்பு தெரிவித்தால் அது ஜனநாயகத்தின் ஒரு அங்கமாகத்தான் பார்க்க வேண்டும்.

தற்போது அரை வட்ட வடிவாக அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கம் தமிழக அரசின் நிதி நிலையை பொறுத்து உருவாக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் முழு வட்ட வடிவில் அரங்கம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம்.

இப்பகுதியில் சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு தற்போது பணம் வழங்கப்பட்டு வருகிறது அதனை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்கின்றனர் என்றார்.

இந்த ஆய்வின்போது தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் பொதுபணித்துறை செயலாளர், சுற்றுலா மற்றும் அறநிலையங்கள்துறை செயலர் ஆகியோர் உடன் இருந்தனர்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 301

    0

    0