ராகுல் குறித்து சர்ச்சை கருத்து.. விளக்கம் கேட்டு தமிழக காங்கிரஸ் நோட்டீஸ்… அசராமல் பதிலடி கொடுத்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்!!

Author: Babu Lakshmanan
10 January 2024, 9:38 am

தன்னிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரம் கிடையாது என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆக உள்ளார். இவர் பொறுப்புக்கு வந்தது முதல் பல்வேறு சிக்கல்களையும், பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார். குறிப்பாக, நீட் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுகவுக்கு எதிராக வெளிப்படையான கருத்துக்களை கூறி வருகிறார். மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றார்.

அண்மையில், செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதுடன், பிரதமர் மோடியுடன் ஒப்பிடும் போடும் ராகுல் காந்தி நிகரான தலைவர் அல்ல என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது இந்தக் கருத்து காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, தனது பேச்சுக்கு விளக்கம் கேட்டு தமிழக காங்கிரஸ் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், தன்னிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தமிழக காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- எனக்கு நோட்டீஸ்அனுப்ப தமிழ்நாடு காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை. காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ்
அனுப்ப மேலிடத்திற்கே அதிகாரம் உள்ளது. என்னுடைய முழு பேட்டியை பார்த்தால் மட்டுமே நான் என்ன பேசினேன் என்று தெரியும், எனக் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?