கோர்ட்டிடம் குட்டு வாங்கிய OPS… அடுத்தடுத்து முயற்சிகளில் பின்னடைவு… பாஜகவுக்கு தாவ திட்டமா…?

Author: Babu Lakshmanan
11 January 2024, 8:05 pm

அதிமுக பொதுக் குழுவால் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டது முதலே ஓ பன்னீர்செல்வம் உரிமையியல் நீதிமன்றம், உயர் நீதிமன்றம்,
உச்ச நீதிமன்றம் என்று மாறி மாறி வழக்கு மேல் வழக்கு போட்டு வருகிறார்.

எப்படியும் கட்சியின் தலைமைப் பதவியை மீண்டும் கைப்பற்றி அதிமுகவை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர் துடியாய் துடிப்பதையும் பார்க்க முடிகிறது. மேலும் 2017 பிப்ரவரி மாதம் சசிகலா, டிடிவி தினகரன் இருவருக்கும் எதிராக தர்ம யுத்தம் நடத்தியதையே மறந்துவிட்டு இப்போது அவர்களுடனே கைகோர்த்துக் கொண்டு இப்படி கோர்ட்டுப்படி ஏறுவது அவருடைய வாடிக்கையாகவும் ஆகிப்போனது.

இதற்காக குறைந்தபட்சம் அவர், 15க்கும் மேற்பட்ட முறை கோர்ட் கதவுகளை தட்டியும் இருப்பார். ஆனால் இதில் ஆரம்ப கட்டத்தில் மட்டும் அவருக்கு ஒரு தீர்ப்பு சாதகமாக வந்தது. அதன் பிறகு எந்தவொரு தீர்ப்பும் ஆதரவாக அமையவில்லை.

அதேநேரம் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி கடந்தாண்டு மார்ச் மாதம் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட பின்பு ஓபிஎஸ்ன் கோபம் இன்னும் அதிகமானது. தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் அதிமுகவின் பெயர்,
கொடி, இரட்டை இலை சின்னத்தை முன்பை விட அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியதுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற லெட்டர் ஹெட்டையும் உபயோகித்து ஊடகங்களுக்கு தொடர்ந்து அறிக்கைகள் அனுப்பியும் வந்தார்.

இதற்கு தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கட்சியின் பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் தொடர்ந்து கூறிவருவது தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய தொடர்ந்து 3-வது முறையாக அவகாசம் கேட்டதால் வழக்கை விசாரித்த தனி நீதிபதி என்.சதீஷ்குமார் அதிருப்தியடைந்து பொதுச் செயலாளர் தேர்தல் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இதுவரை இடைக்கால தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. எனவே அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று கூறி இந்த வழக்கு குறித்து நவம்பர் 30ம் தேதிக்குள் ஓபிஎஸ் பதிலளிக்கும்படி உத்தரவும் பிறப்பித்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் அமர்வு முன்பாக நடந்து வந்தது. 

அப்போது, தகுதி நீக்கம் செல்லும் என்ற உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய வழக்கில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது. தவிர தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதித்ததும் தவறு. கொடி, சின்னம் பயன்படுத்தக்கூடாது என்ற தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு சமமானது. இந்த உத்தரவின் அடிப்படையில் தடை விதிக்க முடியாது என்பதால் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. .

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பில், தகுதி நீக்கம் செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கட்சி, சின்னம், கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தியதால்தான் வழக்கு தொடரப்பட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் இந்த மேல் முறையீட்டு வழக்கில் காட்டிய ஆர்வத்தை தனி நீதிபதியிடம் பதில் மனு தாக்கல் செய்வதில் காட்டி இருக்கலாம் எனவும் வாதிடப்பட்டது.

இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பிற்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். இருதரப்பு வாதமும் நிறைவடைந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும்வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு மீது ஜனவரி 11ம் தேதியான இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அமர்வு “அதிமுக கொடி, சின்னம், பெயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும். இந்த விவகாரத்தில் நிவாரணம் வேண்டி, தனி நீதிபதியிடமே ஓ.பன்னீர்செல்வம் முறையீடு செய்யலாம். அதுபோல அவர் மனுதாக்கல் செய்யும் பட்சத்தில் அந்த மனுவை தனி நீதிபதி சட்ட ரீதியாக பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும்” என்று தெரிவித்து, ஓபிஎஸ்ன் மனுவை தள்ளுபடி செய்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஓபிஎஸ்க்கும், அவருடைய ஆதரவாளர்களுக்கும் பெரும் பின்னடைவான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

ஏனென்றால், “இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதியிடம் உடனடியாக கொண்டு சென்று நிவாரணம் பெறுவது கடினமான ஒன்றாகவே இருக்கும். அதற்கு குறைந்தபட்சம் ஓரிரு மாதங்கள் கூட ஆகலாம். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ்சும், அவருடைய ஆதரவாளர்களும் அதிமுக தொடர்புடைய எதையும் பயன்படுத்த முடியாது என்ற நிலை அவர்களுக்கு மேலும் நெருக்கடியையே ஏற்படுத்தும்” என்பது சட்டத்துறையை சார்ந்தவர்களின் கருத்தாக உள்ளது.

அதேநேரம் “இனி ஓபிஎஸ்க்கு இருக்கும் ஒரேயொரு இறுதி வாய்ப்பு 2022 ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு தன்னை நீக்கி நிறைவேற்றிய தீர்மானம் செல்லாது என்று அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்குதான். இந்த
தீர்ப்பைப் பொறுத்தே அவருடைய அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்”என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“இந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வால் வருகிற 19ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதன் மீது அன்றே தீர்ப்பு வழங்கப்பட்டு விடும் என்று கூறி விட முடியாது.

இந்த மேல்முறையீட்டு வழக்கிலும் கூட ஓபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என உறுதியாக கூறும் அளவிற்கு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஏனென்றால் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்த எந்த தடையும் சென்னை உயர்நீதிமன்றம் விதிக்கவில்லை. மேலும் இந்த பொதுக் குழுவில் கலந்து கொள்ளும்படி ஓபிஎஸ்சை நீதி மன்றம் அறிவுறுத்தியும் இருந்தது.

ஆனால் அன்று அவர் பொதுக்குழுவுக்கு செல்லாமல் காலை 8:30 மணிக்கு
ஆதரவாளர்களுடன் சென்று அதிமுகவின் தலைமை அலுவலகத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து சூறையாடினார். கட்சியின் சொத்து ஆவணங்களை தனது ஆதரவாளர்கள் அள்ளிச்சென்றபோது அதை அவர் தடுக்கவும் இல்லை. இந்த சம்பவத்திற்கு பின்பே ஓபிஎஸ்சும் அவருடைய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன்,ஜே சி டி பிரபாகர் உள்ளிட்டோருக்கு எதிராக சிறப்பு தீர்மானம் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டு அதிமுகவிலிருந்து அவர்கள் உடனடியாக கட்டிடம் கட்டப்பட்டனர்.

ஓபிஎஸ் முன்னிலையில் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டும் உள்ளன. இந்த வீடியோக்கள் உச்ச நீதிமன்றத்தில் முக்கிய சாட்சியங்களில் ஒன்றாக அதிமுக தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டும் இருக்கிறது. இதனால் தனக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பில் வைக்கப்படும் வாதம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

ஒருவேளை தேர்தல் ஆணையத்தின் மூலம் இரட்டை இலையை முடக்குவதற்கு ஓபிஎஸ் முயற்சித்தாலும் அதுவும் கை கூடாமல் போகும் என்பதுதான் எதார்த்தமான உண்மை. ஏனென்றால் அதிகமான எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் யார் பக்கம் உள்ளனர் என்ற அடிப்படையில்தான் கட்சியின் தேர்தல் சின்னம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். இப் பிரச்சனை உச்ச நீதிமன்றம் சென்றாலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்கே வாய்ப்புகள் அதிகம்.

ஓபிஎஸ் இதுவரை ஒரு பிரபல ஆடிட்டர், டிடிவி தினகரன், சசிகலா, பண்ருட்டி ராமச்சந்திரன், பிரதான கட்சி ஒன்றின் தலைவர் ஒருவர் என பல்வேறு தரப்பினரின்
ஆலோசனைகளின்படி செயல்பட்டதுதான் அவருடைய இன்றைய பரிதாப நிலைக்கு காரணம். தன் எண்ணத்தின்படி செயல்பட்டிருந்தால் அவருக்கு இந்த அவலம் ஏற்பட்டிருக்காது.

அதனால் ஓபிஎஸ் இப்போதே தனிக்கட்சி தொடங்கும் நடவடிக்கைகளில் இறங்குவதுதான் சிறந்தது. அல்லது டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்து ஏதாவது ஒரு முக்கிய பதவியை கேட்டு பெற்று தனது இரு மகன்களின் அரசியல் எதிர்காலத்திற்கும் ஓபிஎஸ் நல்லதொரு வழியை காட்டலாம்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

கோர்ட் வழக்குகளில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் ஓபிஎஸ் இனி யாருடைய ஆலோசனையை கேட்டு செயல்பட போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 357

    0

    0