கட்சியினரை மதிக்காமல் அவமதிப்பதாக புகார்… அமைச்சர் கீதா ஜீவன் மீது அதிருப்தி… பதவியை ராஜினாமா செய்த திமுக வட்டச்செயலாளர்..!!

Author: Babu Lakshmanan
13 January 2024, 4:50 pm

தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன், திமுக கட்சியினரை மதிக்காமல் ஒருமையில் பேசி வருவதால், அவரின் கீழ் பணிபுரிய விருப்பம் இல்லாததை தொடர்ந்து திமுக வட்டச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக வட்ட செயலாளர் கீதா செல்வ மாரியப்பன் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கீதா செல்வ மாரியப்பன். இவர் காவல் துறையில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற இவர், திமுகவில் இளைஞர் அணியில் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது 39வது வட்டச் செயலாளராகவும், தூத்துக்குடி மேலூர் பத்திரகாளி அம்மன் கோவில் அறங்காவல் குழு தலைவராகவும் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று கீதா செல்வ மாரியப்பனை மேலூர் பத்திரகாளியம்மன் அறங்காவல் குழு தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, தனது பதவியை ஏன் பறித்தீர்கள் என்று அமைச்சர் கீதா ஜீவனை சந்தித்து கேட்பதற்காக வட்டச்செயலாளர் கீதா செல்வ மாரியப்பன் தூத்துக்குடி மாவட்ட திமுக அலுவலகம் சென்றுள்ளார். அப்போது அங்கே இருந்த அமைச்சர் கீதா ஜீவன், கீதா செல்வ மாரியப்பனை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்களிடம் கீதா செல்வ மாரியப்பன் கூறுகையில், “அமைச்சர் கீதா ஜீவன் தன் மீது வந்த புகாரை முறையாக விசாரிக்காமல், அறங்காவல குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாகக் கூறினார்.

மேலும், என்னை போன்ற ஆரம்ப கால திமுக விசுவாசிகளை உரிய முறையில் மதிக்காமல் ஒருமையில் பேசி வருவதாகவும், கட்சிக்காரர்கள் பார்க்க சென்றால், உட்கார்ந்து கொண்டு தங்களை உட்காரக்கூட சொல்லாமல் அவமதிப்பதால், அமைச்சர் கீதாஜீவன் மாவட்ட செயலாளராக இருப்பதால், அவரின் கீழ் பணிபுரிய விருப்பமில்லை. எனவே எனது வட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன், என அவர் தெரிவித்தார்.

  • sr prabhu reply for comments on actor shri health issues விஷயம் தெரியாம பேசுறவங்க “Beep”… ஸ்ரீ விவகாரத்தில் அசிங்கமாக திட்டிய தயாரிப்பாளர்!
  • Close menu