அஞ்சு வீடு அருவியில் குளிக்க சென்ற இளைஞர்கள் மாயம்… தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்

Author: Babu Lakshmanan
16 January 2024, 9:34 pm

கொடைக்கானல் அருகே பேத்துபாறை பகுதி அஞ்சு வீடு அருவியில் குளிக்க சென்ற கொடைக்கானலை சேர்ந்த இளைஞர்கள் மாயமான நிலையில், அவர்களை தீயணைப்புதுறையினர் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துபாறை பகுதியில் அஞ்சு வீடு அருவி அமைந்துள்ளது. இந்த அருவி பாதுகாப்பற்ற அருவியாகவும் இருந்து வருகிறது. இந்த அருவியைச் சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

தொடர்ந்து இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் விடுமுறை தினங்களில் சென்று வருவர். இந்த நிலையில் கொடைக்கானலை சேர்ந்த கோகுல் மற்றும் நசீர் ஆகிய இளைஞர்கள் அப்பகுதிக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்று உள்ளனர். இதில் அருவியில் குளிக்க சென்ற போது, செங்குத்தான பாறையில் எதிர்பாராத விதமாக சிக்கி மாயமாகினர்.


இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினர் ,காவல் துறையினர் மட்டுமின்றி அப்பகுதி மக்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அருவியில் மாயமாகிய இளைஞர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் . இளைஞர்கள் மாயமாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

மேலும் குளிர் அதிகரித்து உள்ளதால் இளைஞர்களை தேடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆபத்தாக இருக்கும் இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்பதை அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

  • pa ranjith in the discussion of directing palwankar baloo biopic பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக்கை இயக்கும் பா.ரஞ்சித்? ஆச்சரிய தகவல்