தோல்வியை மறைக்க நாடகமாடும் திமுக…. ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு.. எச்சரிக்கும் அண்ணாமலை
Author: Babu Lakshmanan17 January 2024, 8:39 pm
தோல்வியை மறைக்க பாஜகவினர் மீது கைது நடவடிக்கையை எடுத்து திமுக நாடகமாடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் பாஜக கொடியேற்றப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, பாஜகவினரும் கொடியை ஏற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பெரும்பாலான இடங்களில் போலீசார் அனுமதி அளிக்க மறுக்கின்றனர். எனவே, அனுமதியை மீறி பாஜக கொடியை ஏற்றி வருகின்றனர். எனவே, அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்ட பாஜக தலைவர் கட்சி கொடி ஏற்றியதற்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- கட்சிக் கொடியேற்றியதற்காக, பெரம்பலூர் மாவட்ட பாஜக தலைவர் திரு. செல்வராஜ் அவர்கள், திமுக அரசின் தூண்டுதலால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது, தமிழகத்தில் திமுக எத்தனை ஜனநாயக விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.
தமிழகத்தில் தினம் தினம் அரங்கேறும் குற்றச் செயல்களைத் தடுக்கவோ, குற்றவாளிகளைக் கைது செய்யவோ எந்த நடவடிக்கையும் எடுக்கத் திறனற்ற திமுக, தனது சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்விகளை மறைக்க, பாஜகவினரைக் கைது செய்யும் நாடகத்தை அரங்கேற்றுகிறது. திமுகவின் இந்த எதேச்சதிகாரப் போக்கை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்பதை திமுக உணர்ந்திருக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.