அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முறைகேடு… எல்லாமே அமைச்சரோடு சிபாரிசு… என்கிட்ட ஆதாரம் இருக்கு : பகீர் கிளப்பிய மாடுபிடி வீரர்!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
17 January 2024, 9:59 pm

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முறைகேடு நடந்ததாக 2வது இடம் பிடித்த மாடுபிடி வீரர் அபி சித்தர் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த ஜல்லிக்கட்டை கொடியசைத்து திறந்து வைத்தார். காலை 7 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை ஒருமணிநேரம் கூடுதலாக நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை தீரமாக காளையர்கள் அடக்கினர். இறுதியில் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்தி முதலிடம் பிடித்து காரை பரிசாக வென்றார். இவர் கடந்த 2022ம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியிலும் காரை பரிசாக வென்றது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து, 17 காளைகளை அடக்கி பூவந்தி அபிசித்தர் 2-வது இடத்தில் உள்ளார். 12 காளைகளை அடக்கி குன்னத்தூர் திவாகர் 3-வது இடத்தில் உள்ளார்.

இதேபோன்று, போட்டியில் சிறந்த காளையாக மேலூர் குணா என்பவரின் மாடு தேர்வு செய்யப்பட்டது. அதற்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. அதோடு, நாட்டு மாடு மற்றும் கன்றுவும் பரிசாக கொடுக்கப்பட்டது. 2வது இடம் பிடித்த காளை மற்றும் வீரருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

இதனிடையே, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் தன்னை திட்டமிட்டு களமாட வில்லை என்றும், அமைச்சரின் சிபாரிசு என்பதால் முதல் பரிசு பெற்ற கருப்பாயூரணி கார்த்திக்கிற்கு அதிக வாய்ப்புகள் கொடுத்ததாகவும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2ம் பரிசு மாடுபிடி வீரர் அபிசித்தர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாகவும், அமைச்சர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றும் அவர் கூறினார். அதோடு, தனக்கு கார் முக்கியம் இல்லை என்றும், தன்னை வெற்றி பெற்றதாக அறிவித்தால் போதுமானது என்றும் அவர் கூறினார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 410

    0

    0