‘பேருந்து நிலைய பணிகள் இன்னும் முடியல’… தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!!
Author: Babu Lakshmanan18 January 2024, 2:17 pm
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், தமிழக அரசுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், தென்மாவட்டங்களுக்கு பேருந்து சேவையை அதிகரிக்கும் நோக்கிலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்தப் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் டிசம்பர் மாதம் 30ஆம் தேதி திறந்து வைத்தார்.
கோயம்பேட்டுக்கு மாற்றாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை உருவாக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. இருப்பினும், சென்னையில் இருந்து 30 கி.மீ. தொலையில் இந்தப் பேருந்து நிலையம் இருப்பதால், சென்னை மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாகவும், அதிகளவிலான இணைப்பு பேருந்துகள் இல்லாததால் பண்டிகை காலங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கோரி ஆம்னி உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக போக்குவரத்து துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதாவது, ஆம்னி பேருந்து நிலையம் முழுமையாக கட்டி முடிக்காத நிலையில், சென்னைக்குள் ஆம்னி பேருந்து இயக்க அவகாசம் கேட்டு ஆம்னி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வரும் 24ம் தேதி உடன் ஆம்னி பேருந்துகள் மாநகர பகுதிக்குள் இயக்கக் கூடாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.