ராமர் கோவில் திறப்பு… 22ம் தேதி தமிழகத்திற்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் ; தமிழக அரசுக்கு பாஜக கோரிக்கை!!
Author: Babu Lakshmanan20 January 2024, 11:34 am
ராமர் கோவில் திறப்பு விழா நடப்பதையொட்டி தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பல்வேறு சர்ச்சைகள் மற்றும் சட்டப்போராட்டங்களுக்கு பிறகு உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து, வரும் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
இதையொட்டி, கடந்த சில தினங்களாகவே அயோத்தியில் விழாக் கோலம் பூண்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகத்தில் நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என முக்கிய பிரமுகர்களுக்கு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி வரும் 22ம் தேதி உத்தரபிரதேத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அன்றைய தினம் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, பல்வேறு மாநில அரசுகளும் விடுமுறையை அறிவித்துள்ளன.
இந்த நிலையில் தமிழகத்திற்கும் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசுக்கு, பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு, தமிழகத்திலும் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும். இந்த நூற்றாண்டின் மகத்தான நிகழ்வை, தமிழக மக்கள் கண்டு களித்து, இறைவன் ராமர் அருள் பெற, முதலமைச்சர் ஸ்டாலின் விடுமுறை அறிவிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.