அண்ணாமலை பாஜக தலைவரான பின் அநாகரீகமாக பேசுவதே வாடிக்கையாப் போச்சு.. மன்னிப்பு கேட்கணும் : கொந்தளித்த சிபிஎம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 January 2024, 8:41 pm

அண்ணாமலை பாஜக தலைவரான பின் அநாகரீகமாக பேசுவதே வாடிக்கையாப் போச்சு.. மன்னிப்பு கேட்கணும் : கொந்தளித்த சிபிஎம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சமீபத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நெறியாளர் குறித்து அநாகரீகமாக பேசியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. பத்திரிக்கையாளர் கார்த்திகை செல்வன், செய்தியாளராக பல நிலைகளில் பணியாற்றி தற்போது தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராக உள்ளார். பல்வேறு தலைப்புகளில் விவாத நிகழ்ச்சிகளையும், நேர்காணல்களையும் நெறியாள்கை செய்வதில் தனக்கென்று தனிப்பாணியை உருவாக்கி நற்பெயர் எடுத்தவர்.

அவரை நோக்கி முற்றிலும் அநாகரீகமாக, தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவதற்கான அதிகாரத்தை அண்ணாமலைக்கு யார் கொடுத்தது?. அவர் சார்ந்துள்ள பாஜக, ஒன்றிய அரசாக உள்ளது என்பது தரமற்று பேசுவதற்கான உரிமத்தை வழங்குகிறதா? இந்த அநாகரீக நடத்தையை பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் கண்டித்துள்ள பிறகும், அண்ணாமலை தனது பேச்சை நியாயப்படுத்தியுள்ளார். கொங்கு பகுதி மக்களையும், கிராமப்புற மக்களையும் அதற்கு ஆதரவாக குறிப்பிட்டு அவமதித்து உள்ளார்.

பாஜக தலைவராக அண்ணாமலை வந்த பின்னர், இதுபோல அநாகரீகமாக பேசுவதும், ஊடகங்களை தரந்தாழ்ந்து விமர்சிப்பதும் இது முதல்முறை அல்ல. ஊடக நிருபர்கள் குரங்கு போல் தாவுகிறார்கள் என்றார். தனது ரபேல் கைக் கடிகாரத்திற்கு கணக்குக்காட்ட முடியாத போது நிருபரை நோக்கி அநாகரீகமாக கூச்சலிட்டார்; ஊடக நிருபர்களை நோக்கி பணம் வாங்கிக் கொள்ளுங்கள் என செய்தியாளர் சந்திப்பிலேயே பேசி அவமதித்தார்.

இதுபோல வேண்டுமென்றே தொடர்ந்து கண்ணியமற்று பேசிவரும் அண்ணாமலை இப்போது அநாகரீகத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளார். மாறுபட்ட கொள்கைகள் இருந்தாலும், கண்ணியம் தவறக் கூடாது என்பது அரசியல் நியதி. பாஜகவும், அதன் தலைவரும் இந்த நியதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்களாக தங்களைக் கருதிக்கொள்கின்றனர்.

அண்ணாமலையின் இந்தப் போக்கினை வன்மையாக கண்டிப்பதுடன், பொது வெளியில் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 440

    0

    0