அருவருக்கத்தக்க வார்த்தையை பேசிய அண்ணாமலை.. கொந்தளித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி..!!!
Author: Udayachandran RadhaKrishnan21 January 2024, 1:23 pm
அருவருக்கத்தக்க வார்த்தையை பேசிய அண்ணாமலை.. கொந்தளித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி..!!!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அருவருக்கத்தக்க வகையில் கொச்சையான வார்த்தைகளால் ஊடகவியலாளர் குறித்து பேசியது பெரும் பரபரப்புக்கு உள்ளானது.
அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிகையாளர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், தான் கொங்கு வட்டார வழக்கில் தான் பேசியதாகவும் அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தான் இழிவாகப் பேசியதை வட்டார வழக்கு எனக் கூறி நியாயப்படுத்த முயற்சிப்பதாக அண்ணாமலைக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “கொங்கு மண்ணும், மக்களும் மரியாதைக்குப் பெயர்பெற்றவர்கள். ஒருவரை ஒருமையில் அழைக்காமல் மரியாதையோடு அழைக்கும் வழக்கம் உள்ளவர்கள்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரம் தாழ்ந்து, அநாகரிகமான முறையில் ஊடகவியலாளரை விமர்சித்து விட்டு, பழியை தூக்கி கொங்கு மண்டல வட்டார வழக்கின் மீது போடுவது கடுமையான கண்டனத்திற்குரியதும், கொங்கு மண்டல மக்களை அவமதிப்பதுமாகும். அநாகரிகமான, அறுவறுக்கத்தக்க அரசியலையே தனது அடையாளமாக வைத்திருக்கும் அண்ணாமலை ஊடகவியலாளர்களிடமும், கொங்கு மண்டல மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.