ராமர் காலில் விழுந்து வணங்கிய அனுமன்.. மேடையிலேயே மரணம்.. நடிப்பு என நினைத்த பார்வையாளர்கள்.. கண்கலங்க வைத்த காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2024, 2:27 pm

ராமர் காலில் விழுந்து வணங்கிய அனுமன்.. மேடையிலேயே மரணம்.. நடிப்பு என நினைத்த பார்வையாளர்கள்.. கண்கலங்க வைத்த காட்சி!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு நேற்று பிரதிஷ்டை விழா விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

இதனால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அந்த வகையில், அரியானா மாநிலம் பிஹ்வானி நகரில் ராம்லீலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஹரிஷ் மேதா என்ற நபர் கடவுள் அனுமன் வேடமணிந்திருந்தார். ராம்லீலா நிகழ்ச்சி இறுதியில் கடவுள் ராமர் வேடமணிந்த நபரின் காலை அனுமன் வேடமணிந்திருந்தவர் வணங்குவது போன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், நிகழ்ச்சியின் நடுவே ஹரிஷ் மேதா மேடையில் நின்றுகொண்டிருந்த ராமர் வேடமணிந்த நபரின் கால் அருகே விழுந்தார்.

இதனை, நிகழ்ச்சியின் ஒருபகுதி என நினைத்த அருகில் இருந்தவர்கள் ஹரிஷ் மேதாவை எழுப்பாமல் நாடகத்தை தொடர்ந்தனர். சில நிமிடங்களாக ஹரிஷ் மேதா மேடையில் விழுந்துகிடந்ததால் அதிர்ச்சியடைந்த சிலர் அவரை எழுப்ப முயற்சித்தனர்.

அப்போது, ஹரிஷ் மேதா மயங்கிய நிலையில் இருந்ததால் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஹரிஷ் மேதாவை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தார்.

ராம்லீலா நிகழ்ச்சியில் நடித்துக்கொண்டிருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் நிகழ்ச்சி மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். ஆனால், ஹரிஷ் நிகழ்ச்சியில் நடித்துக்கொண்டிருக்கிறார் என நினைத்து அவரை அருகில் இருந்தவர்கள் கவனிக்காமல் இருந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…