ராமர் கோவிலை திறந்து மக்களை திசைத்திருப்ப பாஜக முயற்சி.. கலைஞரின் கனவு திட்டம் அரசியல் சூழ்ச்சிகளால் முடக்கம் ; CM ஸ்டாலின்
Author: Babu Lakshmanan23 January 2024, 7:12 pm
தமிழகத்திற்கும், மக்களுக்கும் எதையும் செய்யாமல் இறுதியில் ஒரு கோவிலை கட்டி மக்களைத் திசைதிருப்ப பாஜக பார்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக பொருளாளரும், எம்பியுமான டிஆர் பாலு எழுதிய 4 நூல்கள் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறியதாவது :- திமுக பொருளாளர் டி.ஆர். பாலு ஒரே கொடி, ஒரே கட்சி என்ற கொள்கையுடன் வாழ்பவர். 17 வயதில் கருணாநிதியின் பேச்சை கேட்டு அரசியலுக்கு வந்தவர். இது டிஆர் பாலுவின் வரலாற்று புத்தகம் கிடையாது. பிறருக்கு வழிகாட்டும் புத்தகம். பாஜகவை வீழ்த்தக் கூடிய இண்டியா கூட்டணியின் உருவாக்கத்தில் டிஆர் பாலுவுக்கு முக்கிய பங்காற்றுகிறது.
யார் ஆட்சியில் அமரக் கூடாது என்பதற்கான தேர்தல் தான் வரும் நாடாளுமன்ற தேர்தல். 10 ஆண்டுகளாக மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்காமல், இறுதியில் ராமர் கோவிலை கட்டி மக்களை திசைதிருப்புகிறது பாஜக. சொல்லத்தக்க சாதனைகள் ஏதுமில்லாததால், கட்டி முடிக்காத கோவிலை பாஜக அவசர அவசரமாக திறந்துள்ளது.
கலைஞரின் கனவுத்திட்டமான சேது சமுத்திரம் திட்டம் அரசியல் சூழ்ச்சிகளால் முடக்கப்பட்டது. சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்தி இருந்தால் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்திருக்கும். இதுபோன்ற திசைதிருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள், எனக் கூறினார்.