ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் காங்., கம்யூனிஸ்ட் : மாறுபட்ட முடிவை எடுத்த திமுக?!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2024, 2:19 pm

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் காங்., கம்யூனிஸ்ட் : மாறுபட்ட முடிவை எடுத்த திமுக?!

குடியரசு தினத்தன்று மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் வைத்து தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் அறிவித்துள்ளார்.

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியினரும் அறிவித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் ஆளுநர் மாளிகை அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்பது குறித்து திமுக ஆலோசித்து முடிவெடுக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளின் போது இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றி எழுதவேண்டுமென பேசினார் ஆளுநர் ஆர்.என். ரவி. காந்தியினால் மட்டுமே சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் நேதாஜியின் தியாகம் பற்றியும் தேசத்தந்தை பற்றியும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆளுநர் அளிக்கும் குடியரசு தின விழா தேநீர் விருந்தை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய செல்வ பெருந்தகை, காந்தியின் தியாகத்தை பற்றி மாற்றி பேசுகிறார் ஆளுநர் என்று குற்றம் சாட்டியுள்ளார். காந்தியை தேசத்தந்தை என்று நேதாஜியே கூறியுள்ளார். தமிழகம், தமிழ்நாடு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்று நினைத்திருந்த வேளையில் மீண்டும் சர்ச்சை பேச்சுகள் பேசி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளை செயல்படவிடாமல் தடுக்கிறார்.

ஆர்எஸ்எஸ் கொள்கைளை திணிப்பதில் முழு மூச்சாக செயல்படுகிறார் ஆளுநர் ரவி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தவும், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட நினைக்கும் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரின் செயலுக்கு வன்மையாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார் செல்வபெருந்தகை.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 341

    0

    0