பறவை காவடிக்கு அனுமதி மறுப்பு… சாலையில் அமர்ந்து பக்தர்கள் போராட்டம் ; திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரபரப்பு!!
Author: Babu Lakshmanan25 January 2024, 10:03 pm
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலின் உள்ளே பறவை காவடிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையில் அமர்ந்து பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக சிறப்பு பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தைப்பூசதிருவிழாவையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், குறிப்பாக அருப்புக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் காவடி எடுத்து அழகு குத்தி பாதயாத்திரை ஆக வந்தனர்.
கடலில் புனித நீராடக் கூடிய பக்தர்கள் ஆழமான பகுதிக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக தடுப்பு மிதவை வேலிகள் அமைக்கப்பட்டு கடல் பாதுகாப்பு குழுவினர்கள், தீயணைப்புத் துறையினரகள் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், தைப்பூசத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குவிந்துள்ளதால் திருச்செந்தூர் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குருக்கள்பட்டி பக்தர்கள் பறவைகாவடி எடுத்து வந்து கோவில் வெளிபிரகாரம் சுற்றி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இதனிடையே, பறவை காவடிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சாலையில் அமர்ந்து பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.