தேவா To ஜிவி வரை.. இளையராஜாவின் மகள் பவதாரணி பாடிய சூப்பர் ஹிட் பாடல்கள்..!(வீடியோ)
Author: Vignesh26 January 2024, 11:00 am
பிரபல பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இவர் ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றிருந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்று உயிரிழந்தார். இவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக பவதாரணி தனது தந்தை இளையராஜா, சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோரின் இசையில் மட்டுமல்லாமல் பிற இசையமைப்பாளர்களான சிற்பி, தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், ஜிவி பிரகாஷ் குமார் ஆகியோரின் இசையிலும் பாடல்களை பாடியுள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் பாடல் பாடியிருக்கும் இவர், தெலுங்கு, கன்னட சினிமாக்களுக்கு இசையமைத்துள்ளார்.
முன்னதாக, பவதாரணி பாடிய பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியிருப்பதுடன் பாரதி என்ற படத்தில் தந்தை இளையராஜா இசையமைப்பில் பாடிய மயில் போல என்ற பாடலுக்கு தேசிய விருதும் இவருக்கு கிடைத்தது.
1997-இல் தேடினேன் வந்தது என்ற காமெடி படத்தில் பாடகர் ஹரிஹரனுடன் இணைந்து ஆல்ப்ஸ் மலை காற்று என்ற டூயட் பாடலை பாடி இருப்பார் பவதாரணி. இந்த பாடல் வரிகளுக்கு ஏற்ப பனி பிரதேசங்களில் கண்களுக்கு குளிர்ச்சியாக இந்த பாடலின் காட்சிகளும் அமைந்திருக்கும் இந்த படத்திற்கு சிற்பி இசையமைத்திருப்பார்.
அதேபோன்று, நேருக்கு நேர்படத்தில் தேவா இசை அமைத்த துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது என்ற பாடலை பாடகர் மனோவுடன் இணைந்து பவதாரணி பாடியிருப்பார். இந்த பாடலில் விஜய் கௌசல்யாவின் நடனம் அற்புதமாக அமைந்திருக்கும்.
மேலும், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் வெளியான இரும்பு குதிரை படத்தில் இடம் பிடித்திருக்கும் பெண்ணே பெண்ணே என்ற மெலடி பாடலை மெல்லிய குரலில் பவதாரணி பட கேட்பவர்களை மெய்மறக்க செய்திருப்பார்.
மேலும், பிரபல பாடகர் கார்த்திக் இசையமைப்பாளராக அறிமுகமான படம் அரவான். வசந்த் பாலன் இயக்கத்தில், ஆதி தன்ஷிகா நடித்திருந்த இந்த படத்தில் இடம்பெறும் உன்னை கொல்ல போறேன் என்ற மெலடி பாடலை எம் எல் ஆர் கார்த்திகேயன் என்ற பாடகருடன் பாடியிருப்பார் பவதாரணி. நா முத்துக்குமார் இந்த பாடல் வரிகளை எழுதி இருப்பார். படத்தில் அற்புதமான காதல் பாடலாக இந்த பாடல் விஷுவல் செய்யப்பட்டிருக்கும்.
இன்னும் பல சூப்பர் ஹிட் பாடல்களை ஏராளமான கவனிக்கப்படாத பாடல்களையும் பிற இசையமைப்பாளர்கள் இசையிலும் மெலடி துள்ளல் பாடல்களை பாடகி பவதாரணி பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.