குடியரசு துணை தலைவர் வருகை எதிரொலி… சிதம்பரம் நடராஜர் கோவிலில் பலத்த பாதுகாப்பு ; சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி..!!

Author: Babu Lakshmanan
29 January 2024, 12:56 pm

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு குடியரசு துணைத் தலைவர் வருகை எதிரொலியாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாட்டின் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகிறார்.

புதுச்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் வரும் அவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஹெலிபேடில் தரை இறங்குகிறார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகிறார்.

அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் பாபாஜி கோயிலில் தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டு செல்கிறார். சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாடு வடக்கு மண்டல காவல்துறை ஐஜி கண்ணன் தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோயிலுக்குள் வரும் பக்தர்கள் கோயில் வாயில் அருகே தீவிர பரிசோதனை செய்த பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு, அதில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பிறகு கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். போலீஸ் மோப்பநாய் மூலம் பல்வேறு இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

இதுபோல் ஜனாதிபதி கார் வரும் கோயில் உள்ள கீழசன்னதி மற்றும் அதன் அருகில் உள்ள கடைகள், துணை ஜனாதிபதி வந்து செல்லும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கியுள்ளார். இதனால், அந்த பகுதியில் கடைகள் மூடப்பட்டு இருக்கிறது. துணை ஜனாதிபதி வருகையையொட்டி சிதம்பரத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!