மேகதாது அணை விவகாரம்… திமுக அரசின் மிகப்பெரிய துரோகம் ; கர்நாடகாவிடம் மீண்டும் பறிகொடுக்கப்பட்ட உரிமை ; பிஆர் பாண்டியன்!!

Author: Babu Lakshmanan
3 February 2024, 10:21 am

மேகதாது அணை திட்ட அறிக்கை குறித்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் வாக்கெடுப்பில் தமிழ்நாடு அரசு பங்கேற்றது மிகபெரும் துரோகம் என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே உபரி நீரையும் தடுத்து மேகதாது அணை கட்டுவதற்கு கடுமையான முயற்சி எடுத்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தனது ஆட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட மேகதாது அணை கட்டுமான வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசின் ஜல்சக்தி துறைக்கு அளித்தது. அதனை மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தான் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளதாக கூறி ஆணையத்திற்கு அறிக்கையை அனுப்பி வைத்தது.

அதனை ஆணையத்தில் விவாதிக்க கூடாது. அதனை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி கேரள முதலமைச்சரின் ஆதரவை தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் கோரினோம். கேரள முதலமைச்சரின் ஆதரவோடு தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்கள் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவித்து விவாதிக்காமல் தடுக்கப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேகதாது அணைக்கு குறித்து ஆணையத்தில் விவாதிக்கக்கூடாது நிராகரிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்து விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் கடந்த குடியரசு தின விழாவில் கர்நாடக மாநில ஆளுநர் மேகதாது அணை கட்டுவதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளதாகவும், அதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கடந்த வாரம் தமிழ்நாடு அரசு நீர் பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களிடம் நேரில் எடுத்துரைத்து உரிய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகா அரசின் மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கை குறித்து மத்திய அரசின் நீர்வள ஆணையத்திற்கு அனுப்பி வைத்து புதிய அணை கட்டுவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் நீர்வள ஆணையத்திற்கு மட்டுமே உள்ளதால், அதன் கருத்தை பெற்று செயல்படலாம் என கூறி வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தி வன்மையாக கண்டிக்கத்தக்கது

காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவிற்கு ஆதரவான மத்திய அரசின் மறைமுக சூழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசும் கூட்டு சேர்ந்து துணை போயிருக்கிறது. குறிப்பாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசின் நீர்வள துறை ஆணையத்திற்கு அனுப்பி வைத்து நீர்வள ஆணையம் அணை கட்டுவதற்கான அதிகாரம் பெற்ற அமைப்பு என்பதால் அவர்கள் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வது என்கிற அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தியுள்ளது.

வாக்கெடுப்பில் கர்நாடகா, கேரளா உட்பட மத்திய அரசின் பிரதிநிதிகளும் தமிழ்நாட்டிற்கு எதிரான வகையில் மேகதாட்டு வரைவு திட்ட அறிக்கை அனுப்பி வைக்க ஆதரவாக வாக்களித்துள்ளது. தமிழ்நாடும், புதுச்சேரி மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக வந்திருக்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வாக்கெடுப்பிற்கு தமிழ்நாடு அரசு ஒத்து போனது ஏன்?இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது வாக்கெடுப்பிற்கு ஆணையம் அனுமதித்தது ஏன்? அப்படி ஆணையம் அனுமதிக்கும் பட்சத்தில் தமிழகம் அதனை எதிர்த்து வெளியேறாதது ஏன்? வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்திருந்தால் தீர்மானம் நிறைவேறியிருக்காது.

காவிரி குறித்த அனைத்து இறுதி முடிவெடுக்கிற அதிகாரங்களும் உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின்நேரடி பார்வையில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட இணை அமைப்பாக உள்ள காவிரி மேலாண்மை ஆணையம், மத்திய அரசு நீர்வளத்துறை ஆணைய கருத்தை கோரி இருப்பது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

இதன் மூலம் விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தால் அஇஅதிமுக ஆட்சி காலத்தில் பெற்றுக் கொடுத்த காவிரி உரிமையை மீண்டும் மத்திய அரசிடம் பறிகொடுத்து காவிரி டெல்டா விவசாயிகளை அழிக்க கர்நாடகாவிற்கு திமுக அரசு துணை போகிறதோ? என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசு வெளிப்படையான தனது கொள்கை முடிவு குறித்தும்,கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

மேகதாது அணைக்கட்டும் கர்நாடகா அரசின் நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் சந்தேகமளிக்கிறது. இது குறித்து முதலமைச்சர் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தியது குறித்து உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆணையத்தின் மீது அவசர வழக்காக தமிழக அரசு தொடர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மறுக்கும் பட்சத்தில் காவிரி மேகதாது விவகரத்தில் தமிழ்நாடு விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் திமுக அரசுக்கெதிரான போராட்டத்தை காவிரி டெல்டாவில் தீவிர படுத்துவோம் என எச்சரிக்கிறேன், என்றார்.

  • Hudson Meek Passed away at the age of 16காரில் இருந்து விழுந்த பிரபல இளம் ஹாலிவுட் நடிகர்.. ஒரு வாரம் கழித்து பிரிந்த உயிர்!
  • Views: - 305

    0

    0