போலீஸ் பாதி… திருடன் பாதி : பெண்களிடம் நகை பறித்த தலைமை காவலர் : காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி!
Author: Udayachandran RadhaKrishnan3 February 2024, 3:54 pm
போலீஸ் பாதி… திருடன் பாதி : பெண்களிடம் நகை பறித்த தலைமை காவலர் : காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி!
பொள்ளாச்சி அருகே தனியாக சென்ற பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் சென்று நகைப்பறிப்பில் ஈடுபட்ட செட்டிப்பாளையம் காவல்நிலைய தலைமை காவலரை போலீஸார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி சாய்பாபா காலனியைச் சேர்ந்த மகேஸ்வரி (58) இவர் கடந்த 27 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் ஜோதிநகர் அருகே வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அவ்வழியாக புதிய கருப்பு நிற இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் அவரது கழுத்தில் இருந்த, நான்கு பவுன் செயினை பறித்துச்சென்றனர்.
அதே போல் பொள்ளாச்சி அருகே கோலார்பட்டி சுங்கத்தை சேர்ந்த முருகன் இவரது மனைவி அம்சவேணி (32) இவர், இருசக்கர வாகனத்தில் உடுமலை சாலை பிஏபி அலுவலகம் பகுதியில் வந்த கொண்டிருந்த போது, அவ்வழியாக புதிய கருப்பு நிற இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் அவரது கழுத்தில் இருந்த, இரண்டு பவுன் நகையை பறித்து கொண்டு தப்பிச் சென்றார்.இது குறித்து இருவரும் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிய காட்சிகளை ஆய்வு செய்ததில் இரு பெண்களிடமும் நகைபறிப்பில் ஈடுபட்டது ஒரே நபர் என தெரியவந்தது.
இதையடுத்து பொள்ளாச்சி நகரம், உடுமலை சாலை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சுமார் 150 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நகைப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது மாக்கினாம்பட்டி பகுதியில் வசித்து வரும் தலைமை காவலர் சபரிகிரி (41) என்பது தெரியவந்தது.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி உள்ளார். பின்பு மேட்டுப்பாளையம் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பின்பு செட்டிபாளையம் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த இவரை சிறப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யபட்ட நிலையில் நகைப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் சபரி மீது வழக்கு பதிந்து சபரிகிரியை கைது செய்து அவரிடம் இருந்து 7.5 பவுன் நகை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.