மீண்டும் மீண்டும் அதிமுகவை தேடும் பாஜக?…. EPS வைத்த முற்றுப்புள்ளி!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2024, 9:06 pm

பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், அதை டெல்லி பாஜக மேலிடம் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

ஏனென்றால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் இருந்தால் மட்டுமே, தமிழகத்தில் திமுக அணிக்கு டஃப் பைட் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையின் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் மீண்டும் அதிமுகவை கொண்டு வந்து விட வேண்டும் என்ற முயற்சியில் பாஜக இறங்கி இருப்பதுபோல் தெரிகிறது.

இதற்கு முக்கிய காரணம், 2019 தேர்தலின்போது, தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தது. அப்போது திமுக கூட்டணி கட்சிகளின் வலுவான ஒற்றுமை, பாஜகவின் அடிமை கட்சியாக மாறி சிறுபான்மையினருக்கு எதிராக அதிமுக செயல்படுகிறது என்ற திமுக தலைவர் ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு ஆகியவற்றின் காரணமாக 38 தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுகவுக்கு ஒரேயொரு இடம்தான் கிடைத்தது.

ஆனால் மாநிலத்தில் இப்போதோ திமுக ஆட்சி நடக்கிறது. இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக அக் கட்சி அதிகாரத்தில் இருப்பதாலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சரிவர கையாளப்படவில்லை என்று கூறப்படுவதால் மக்களிடம் ஏற்பட்டுள்ள கடும் அதிருப்தி காரணமாக திமுக கூட்டணிக்கு சென்ற தேர்தல் போல வெற்றி கிடைக்காத சூழல் உருவாகி இருப்பது தெரிகிறது. 32 தொகுதிகள் வரை மட்டுமே அந்த கூட்டணி 35% முதல் 40% வாக்குகளைத்தான் பெறும். எஞ்சிய 7 தொகுதிகளில்தான் அதற்கு 40 முதல் 45 சதவீத ஓட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று இதுவரை எடுக்கப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகளின் வாயிலாக தெரியவந்துள்ளது. ஆனால் சென்ற தேர்தலில் திமுக கூட்டணி 58 சதவீத ஓட்டுகள் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் மாநிலத்தில் திமுகவுக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சியாக 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகதான் திகழ்ந்து வருகிறது. அதனால் அதனுடன் கூட்டணி வைத்தால் 25 தொகுதிகளில் வெற்றி பெற்று விட முடியும் என்று டெல்லி பாஜக மேலிடம் கணக்கு போடுகிறது.

எனவேதான் பாஜக கூட்டணியே வேண்டாம் என்று ஐந்து மாதங்களுக்கு முன்பே முடிவெடுத்து வெளியேறி விட்ட அதிமுகவை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க டெல்லி பாஜக மேலிடம் தொடர்ந்து தூண்டில் போட்டு வருகிறது. இதற்கான முன்னெடுப்புகளை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மேற்கொள்வதாகவும் கூறப்பகிறது.

இதை உண்மை என்று சொல்வது போல சில தினங்களுக்கு முன்பு, டெல்லியில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே பி நட்டாவை சந்தித்து பேசிய ஜி கே வாசன், மறுநாளே சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.

அப்போது ஜி கே வாசன் தன்னை எதற்காக சந்திக்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி அவரிடம், “பாஜக கூட்டணியில் மீண்டும் இணையும்படி அதிமுகவை வற்புறுத்தாதீர்கள். நாங்கள் வெளியேறியது வெளியேறியதுதான். உங்களுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் தருவார்கள் என்பதற்காகத்தானே அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பி சீட்டே வழங்கப்பட்டது. ஆனால் மத்திய பாஜக அரசு உங்கள் இருவரையும் கண்டு கொள்ளவே இல்லை. ஏமாற்றி விட்டது. இப்போது வலுவான கூட்டணி இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்று பாமகவையும், எங்களையும் எதிர்பார்க்கிறார்கள்.

டிடிவி தினகரனையும், ஓபிஎஸ்சையும் கூட்டணிக்குள் கொண்டு வந்து எம்பி சீட்டுகளை கொடுக்கவேண்டும் என்று முன்பு நிபந்தனை விதித்தார்கள். இது பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்து வரும் சுப்பிரமணியசாமிக்கு பாஜகவில் தொகுதி கேட்பதுபோல் ஆகும்.

இங்கேயுள்ள மாநிலத் தலைவர் ஒருவர் அறிஞர் அண்ணாவையும், ஜெயலலிதாவையும் மிக மோசமாக தாக்கி பேசினார். அதை நாங்கள் வன்மையாக கண்டித்தோம். ஆனால் டிடிவி தினகரனும், ஓபிஎஸ்சும் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மாதானே இருந்தார்கள்.

அதுவும் கட்சியின் தலைமை அலுவலகத்தை சூறையாடிய ஓபிஎஸ்க்கு மட்டுமல்ல,
சசிகலா சிறைக்கு சென்றபோது, தன்னிடம் இருந்த18 எம்எல்ஏக்களை வைத்து அதிமுக அரசை கவிழ்க்க முயன்ற டிடிவி தினகரனுக்கும் இனி ஒருபோதும் இடமே இல்லை.

தவிர திமுக போல ஒரு குடும்ப ஆதிக்கம் நிறைந்த கட்சியாக மாறுவதை அதிமுக தொண்டர்கள் யாருமே விரும்பவில்லை. இது போன்ற நிலையில் அவர்களை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வந்தால் என்னவாகும்?”என்று எடப்பாடி பழனிசாமி 15க்கும் மேற்பட்ட கிடுக்கு பிடி கேள்விகளை எழுப்பி அதை பாஜக மேலிட தலைவரிடம் தெரிவித்து விடுங்கள் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ஜி கே வாசன், ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், “பிப்ரவரி 1-ம் தேதி ஜே.பி. நட்டாவை பார்த்து பேசினேன். பிப்ரவரி 2-ம் தேதி எடப்பாடி பழனிசாமியை சந்தித்தேன். இதற்கிடையே அண்ணாமலையோடும் போனில் பேசினேன். இவர்களுடன் அரசியல்தான் பேசினேன். ஆனால் இந்த சந்திப்புகளில் அதிமுக, பாஜக கூட்டணி இணைப்பு போன்ற எந்த பேச்சும் நடைபெறவில்லை” என்று மறுத்துள்ளார்.

இந்த நிலையில்தான், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு விஷயத்தை தெளிவுபடக் கூறி இருக்கிறார். “அதிமுகவுடன் – பாஜக இல்லாத மற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை யார் செய்தாலும் வரவேற்கதக்கது” என்று இனி பாஜகவுடன் கூட்டணியே இல்லை என்பதை சுட்டிக்காண்பித்து இருக்கிறார்.

தேர்தல் கள நிலவரம் குறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறுவது இதுதான். “டெல்லி பாஜக மேலிடம் எதற்காக அதிமுகவை தங்களது கூட்டணிக்குள் கொண்டு வர விரும்புகிறது என்பது வெளிப்படையாக தெரிகிற ஒன்று.

தற்போது பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி ஆகியவை மட்டுமே உள்ளன. இந்த இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் பெரம்பலூர், வேலூர் தொகுதிகளில் மட்டுமே தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உள்ளது. அதேநேரம் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு அவர் சார்ந்தசமுதாய ரீதியாக தென் மாவட்டங்களில் 6 எம்பி சீட்களில் நான்கு முதல் ஏழு சதவீத ஓட்டுகள் கிடைக்கலாம். ஓ பன்னீர்செல்வமும், சசிகலாவும் இதே சமுதாய வாக்குகளைத்தான் நம்பி இருக்கிறார்கள் என்பதால் அது தினகரனுக்கு கிடைக்கும் என்று கூறப்படும் ஓட்டு கணக்கில்தான் சேரும்.

அதேநேரம் பாமகவையும், தேமுதிகவையும் தங்களது கூட்டணிக்குள் கொண்டு வர டெல்லி பாஜக அத்தனை அஸ்திரங்களையும் கையில் எடுத்து இருக்கிறது. இதன்மூலம் வெற்றி பெற்று விடலாம் என்று பாஜக போடும் கணக்கு கை கூட வாய்ப்பில்லை என்பதுதான் கள எதார்த்தம்.

ஏனெனில் பாமகவை பொறுத்தவரை வடக்கு மற்றும் கொங்கு மண்டலங்களில் குறிப்பிட்ட 10 தொகுதிகளில் மட்டுமே ஓரளவு வாக்கு வங்கி உள்ளது.

மேலும் பாமக, அமுமக கட்சிகளுக்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சீரான வாக்கு வங்கி இல்லை. இதனால் பாஜக கூட்டணியால் மிக அதிகபட்சமாக
16 தொகுதிகளில் மட்டும்தான் பலத்த மும்முனை போட்டியை உருவாக்க முடியும்.

தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்று கூறப்படுவதால் பாஜகவின் வாக்கு வங்கி 3 சதவீதத்திலிருந்து ஏழாக உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் அதிமுக இல்லாத பாஜக கூட்டணிக்கு 15 சதவீத வாக்குகளுக்கு மேல் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.

அதேநேரம் 2021 தமிழக தேர்தலில் அதிமுகவுக்கு மட்டும் 33 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளது. அப்போது பாமக 3.8 சதவீதமும், பாஜக 2.6 சதவீதமும் பெற்றன. தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட டிடிவி தினகரன் கட்சிக்கும் இதே சதவீத அளவில்தான் வாக்குகள் கிடைத்தன.

இந்த தேர்தலைப் பொறுத்தவரை அன்றைய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மாநில முழுவதும் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்யவே இல்லை. இதனால் அவர் சார்ந்த சமுதாய வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காமல் போனது.

ஆகவே முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் செய்ததால் கிடைத்த வாக்குகள் என்றே இதை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். இப்போது பாஜக தமிழகத்தில் அசுர வளர்ச்சி கண்டிருக்கிறது என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டு அதிமுகவுக்கு 2021ல் கிடைத்த வாக்குகளில் ஐந்து சதவீதத்தை கழித்தால் கூட அக்கட்சிக்கு குறைந்தபட்சம் 27% ஓட்டுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

அதேநேரம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதால் மாநிலத்தில் உள்ள 12 சதவீத சிறுபான்மையினர் வாக்குகளில் குறைந்த பட்சம் நான்கு சதவீத ஓட்டுகளையும் பெற்றுவிட முடியும் என்றும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் கூட 31 சதவீத வாக்குகள் வரை பெற்றுவிடலாம் என்றும் அதிமுக தலைமை கருதுகிறது. கடும் மும்முனை போட்டியில் 31 சதவீதம் என்பது
12 தொகுதிகள் வரை வெற்றியைப் பெற்றுத் தரக் கூடியது.

எனவே பாஜக மேலிடம் நினைப்பது போல் அதிமுகவை மறுபடியும் தங்கள் கூட்டணியில் சேர்க்க நினைப்பது நடக்காத காரியம். அதுவும் 5 மாதங்களுக்கு முன்பு இடம் பெற்றிருந்த ஒரு கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டு அதே கூட்டணியில் மீண்டும் இணைந்தால் மக்களிடம் நம்பகத் தன்மையை இழந்து அதிமுக அடியோடு காணாமல் போய்விடும் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதது அல்ல.

தமிழகத்தில் அண்ணாமலையின் செல்வாக்கு தாறுமாறாக உயர்ந்துள்ளது, என்று டெல்லி பாஜக நம்புமேயானால் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க விரும்புவதற்கான அவசியம் இல்லையே. வரும் தேர்தலில் அவரவர் பலத்தை அவரவர் நிரூபித்து விட்டு போகட்டும். யாருக்கு வெற்றி, இரண்டாவது இடம் மூன்றாவது இடம் யாருக்கு என்பது அப்போது தெரிந்துவிடப் போகிறது.

தமிழகத்தில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.
ஆனால் பெரும்பாலான ஊடகங்கள் திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையேதான் கடும் போட்டி என்று செய்திகளை வெளியிடுகின்றன. விவாதங்களையும் நடத்துகின்றன. இந்த இரண்டு கட்சிகளும் அதையே விரும்புகின்றன.

ஏனென்றால் பாஜகவுடன் நேரடி மோதல் என்றால் தங்களுக்குத்தான் அதிக அளவில் வெற்றி கிடைக்கும் என திமுக நம்புகிறது. பாஜகவோ அதிமுகவை முந்தி இரண்டாவது இடம் வந்தாலே நமக்கு மிகப் பெரிய வெற்றி என்று நினைக்கிறது. ஆனால் 50 ஆண்டுகளாக அரசியலில் உள்ள ஒரு கட்சியை அவ்வளவு எளிதில் வீழ்த்தி விட முடியாது என்பதே எதார்த்தமான உண்மை.

320-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று மோடி ஹாட்ரிக் சாதனை படைப்பார் கூறப்படும் நிலையில், வேண்டாம் என்று ஒதுங்கிப் போனவர்களை பாஜக மீண்டும் மீண்டும் தேடிப் போவது, தேசிய கட்சியான அதற்கு தமிழகத்தில் பலவீனத்தையே ஏற்படுத்தும். எனவே அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை பாஜக மேலிடம் வெளிப்படையாக அறிவித்து இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

பாஜக என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

  • Bigg Boss Tamil Season 8 This Week Double Eviction யாருமே எதிர்பார்க்காத எலிமினேஷன்… பிக் பாஸ் ரசிகர்கள் கொந்தளிப்பு : கடும் எதிர்ப்பு!