திமிர் பிடித்தவர் டிஆர் பாலு… பட்டியலினத்தவர்களை இழிவுபடுத்தியதற்கு மன்னிப்பு கேட்ட ஆகனும் ; அண்ணாமலை…!!

Author: Babu Lakshmanan
6 February 2024, 2:18 pm

மத்திய இணையமைச்சர் எல்.முருகனை இழிவாக பேசிய திமுக எம்பி டிஆர் பாலு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

மக்களவையின் இன்றைய விவாதத்தின் போது பேசிய திமுக எம்பி ஆ.ராசா, தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், நிதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறினார். மேலும், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதி வழங்கப்படுவதாகக் கூறிய அவர், அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி நிவாரண நிதியை வழங்க வழிவகை செய்யும் விதமாக, புதிய விதிகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆ.ராசாவின் இந்தப் பேச்சுக்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் பேசியதாவது :- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் சென்னைக்கு மட்டும் தமிழக அரசு ரூ.500 கோடி வழங்கி இருப்பதாகவும், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு தமிழக அரசின் குழுவுக்கு முன்பாக மத்திய அரசின் குழு ஆய்வு செய்ததாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சரின் இந்த விளக்கத்தை தொடர்ந்து திமுகவின் மற்றொரு எம்பியான டி.ஆர் பாலு பேசினார். அப்போது, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகனும் தன் விளக்கத்தை கொடுக்க முயன்றார்.

பேரிடர் குறித்து வானிலை ஆய்வு மையம் சரியான கணிப்பை வழங்கவில்லை என்று குற்றம்சாட்டியதுடன், மத்திய இணையமைச்சர் நித்யானந்த் ராய் மற்றும் எல்.முருகன் ஆகியோர் எம்பியாக இருக்கவே தகுதி இல்லை என்றும், மத்திய அமைச்சராகவும் இருக்க தகுதி இல்லை என்றும், அமைச்சராக இருந்தாலும் நாடாளுமன்றத்தில ஒழுங்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.

டிஆர் பாலுவின் இந்தப் பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் திமுக, பாஜகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், திமுக எம்பி டிஆர் பேசிய பேச்சை திரும்பப் பெற வேண்டும் என்றும், மத்திய அமைச்சர் குறித்து அவர் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனிடையே, தமிழகத்திற்கான வெள்ளநிவாரண நிதியை விடுவிக்காததைக் கண்டித்து திமுக எம்பிக்களை வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், பட்டியலின அமைச்சரை தகுதியில்லாதவர் எனன் கூறிய திமுக எம்பி டிஆர் பாலுவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில், “எல்முருகன் அமைச்சராக இருக்கவே தகுதியற்றவர் என திமுக எம்பி டிஆர் பாலு கூறியதை வன்மையாக கண்டிக்கிறேன். பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவரை பற்றி டிஆர் பாலு இழிவாக கூறுவது இது முதல்முறையல்ல. தன்னலமற்ற முறையில் மக்கள் பணியாற்றி வரும் எல்.முருகனின் அர்ப்பணிப்பு திமுக எம்பிக்களை எரிச்சலையடைய வைத்துள்ளது. டி.ஆர்.பாலு போன்ற திமிர்பிடித்தவரால் மட்டுமே, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும், அமைச்சரையும் “தகுதியற்றவர்” என்று சொல்ல முடியும். பட்டியலின சமூகத்தை தகுதியற்றவர் எனக் கூறிய திமுக எம்பி டிஆர் பாலு தார்மீக மன்னிப்பு கேட்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 268

    0

    0