வேலூரில் ஆதியோகி ரத யாத்திரை! ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பிற்கும் ஏற்பாடு!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2024, 5:41 pm

வேலூரில் ஆதியோகி ரத யாத்திரை! ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பிற்கும் ஏற்பாடு!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிப் 10 ஆம் தேதி வரை வலம் வர உள்ளது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை வேலூரில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூர் முத்தண்ணா நகரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று (06-02-2023) நடைபெற்றது. இதில் தென் கயிலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் திரு. மணிவண்ணன் அவர்கள் பங்கேற்று பேசியதாவது

“கோவை ஈஷா யோக மையத்தில் 30 ஆவது ஆண்டாக மஹாசிவராத்திரி விழா மார்ச் 8 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட ஒரு ரதம் பிப் 2 அன்று வேலூரை வந்தடைந்தது. இந்த ரதமானது வேலூர் நகரின் பல்வேறு இடங்களுக்கு பயணித்த பிறகு காட்பாடி, ஆற்காடு, சோளிங்கர், கே.வி.குப்பம், குடியாத்தம், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு பிப் 10 ஆம் தேதி வரை பயணிக்க உள்ளது.

கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.

இதுமட்டுமின்றி, இந்த ஆண்டு கோவை ஈஷா யோக மையத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் 36 இடங்களில் மஹாசிவராத்திரி கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள ராணி மஹாலில் இவ்விழா நேரடி ஒளிபரப்பு மூலம் மார்ச் 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 6 மணி வரையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட இருக்கிறது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம்.” இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தென் கயிலாய பக்தி பேரவையின் தன்னார்வலர்கள் குணசீலன் மற்றும் விஜயகுமார் உடன் பங்கேற்றனர்.

  • goundamani does not eat in home said by bayilvan கவுண்டமணியிடம் இருந்த மர்மம்? அந்த சாப்பாட்டுல என்ன இருக்கு? பின்னணியை உடைத்த பிரபலம்…