மதரஸா இடிக்கப்பட்டதால் பதற்றம்.. பற்றி எரியும் மாவட்டம் : வன்முறையாளர்களை கண்டால் சுட உத்தரவு.. ஊரடங்கு அமல்!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2024, 9:53 am

மதரஸா இடிக்கப்பட்டதால் பதற்றம்.. பற்றி எரியும் மாவட்டம் : வன்முறையாளர்களை கண்டால் சுட உத்தரவு.. ஊரடங்கு அமல்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்த்வானி நகரின் கபூர் பஸ்தி, தோலக் பஸ்தி, இந்திரா நகர், பான்புல்புரா ஆகிய பகுதிகளில் சுமார் 4000க்கும் அதிகமான இஸ்லாமிய குடும்பங்கள் ஏறத்தாழ 100 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

ஆனால் இவர்கள் வசித்து வரும் பகுதி ரயில்வே துறைக்கு சொந்தமானது என திடீரென கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரகாண்ட் நீதிமன்றம் அறிவித்தது.

அதுமட்டுமல்லாது ஒரு வாரத்திற்குள் அனைவரும் இந்த இடத்தை விட்டு காலி செய்ய வேண்டும் என்றும், செய்யாவிடில் வலுக்கட்டாயமாக காலி செய்யப்படுவீர்கள் எனவும் எச்சரித்தது.

இதனை எதிர்த்து இப்பகுதி மக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த மனு விசாரணையில் இருக்கிறது. இந்நிலையில், சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி இப்பகுதியில் உள்ள மதராஸாவை புல்டோசர் கொண்டு இடித்தது.

நகராட்சி ஆணையர் பங்கஜ் உபத்யாய் முன்னிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆண்டாண்டு காலமாக வசித்து வரும் பகுதியில் இருக்கும் மதராஸாவை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் மக்கள் ஒன்று திரண்டனர்.

அப்போது வாக்குவாதங்கள் எழுந்த நிலையில், அது கைகலப்பாக மாறியது. காவல்துறையினர் மீதும், நகராட்சி ஊழியர்கள் மீதும் அப்பகுதி மக்கள் கற்கள் வீசி தாக்கியதாகவும், எனவே கண்ணீர் புகை குண்டு வீசி அவர்களை கலைத்ததாகவும் காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட வன்முறையில் தற்போது வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஏராளமான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டிருக்கிறது.

வன்முறையாளர்களை கண்டதும் சுட காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல வன்முறை மேலும் பெரியதாக வெடிக்காமல் இருக்க அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

அப்பகுதியில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் வேண்டும் என்றே மதராஸா இடிக்கப்பட்டதாக அப்பகுதிகள் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால், முன்கூட்டியே நோட்டீஸ் கொடுத்த பின்னர்தான் ஆக்கிரமிப்புகளை அகற்றினோம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 484

    0

    0