கிரிக்கெட் போட்டியை நடத்துவதில் முன்விரோதம்… இளைஞருக்கு அரிவாள் வெட்டு… இரு பெண்கள் மீது தாக்குதல் ; இலங்கை தமிழர் முகாமில் பரபரப்பு…!!

Author: Babu Lakshmanan
12 February 2024, 1:34 pm

திருமயம் அருகே இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் முன்விரோதம் காரணமாக முகாம் நிர்வாகத் தலைவர் முகாமில் வசிக்கும் ஒருவரை கத்தியால் வெட்டி இரண்டு பெண்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள தேக்காட்டூர் லெனா விலக்கு இலங்கை தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இங்கு முகாம் நிர்வாக தலைவராக மருதமுத்து மகன் மயில்வாகனன் இருந்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ஜூட் பிரேம்குமார் என்பவருக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடத்துவது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இது இருவருக்கும் இடையே முன் விரோதமாக மாறியது. இந்நிலையில் மயில்வாகனன் நேற்று மாலை மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது முகாம் பகுதியில் ஜூட் பிரேம்குமார் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இதனிடையே, மது போதையில் வந்த மயில்வாகனன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த ஜூட் பிரேம்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மயில்வாகனன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜூட் பிரேம்குமாரை தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் பிரேம்குமாருக்கு முகத்தில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனை தடுக்க வந்த அவரது தங்கை சஜிதா பிரேமகுமாரி மற்றும் அவரது உறவினர் மணிமேகலை ஆகிய இரு பெண்களையும் தாக்கியுள்ளார்.

‌இதனைத் தொடர்ந்து காயம் ஏற்பட்ட பிரேம்குமார் மற்றும் அவரது தங்கை உள்ளிட்ட இரு பெண்கள் திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்விரோதம் காரணமாக லேனா விளக்கு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நிர்வாக தலைவர் ஒருவரே கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பிரேம்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் நமணசமுத்திரம் போலீசார் மயில்வாகனனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Jewelry theft at Seetha's house பிரபல நடிகை வீட்டில் திருட்டு..போலீஸில் பரபரப்பு புகார்..!
  • Views: - 411

    0

    0