அவைக் குறிப்பில் நீக்கப்பட்டதை வீடியோவாக வெளியிட்ட ஆளுநர் : அரசியல் களத்தில் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan12 February 2024, 7:57 pm
அவைக் குறிப்பில் நீக்கப்பட்டதை வீடியோவாக வெளியிட்ட ஆளுநர் : அரசியல் களத்தில் பரபரப்பு!!
இந்த வருடத்தின் முதல் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையின் தொடக்கத்தில் திருக்குறளை வாசித்தார். அதன் பிறகு பட்ஜெட் கூட்டத்தினரின் அறிமுகத்தை வாசித்தார். அதன் பின் பாதியில் அதனை நிறைவு செய்து, இங்கு (சட்டப்பேரவையில்) தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று கூறி இரண்டு நிமிடத்தில் உரை நிறைவு செய்து அவையை விட்டு வெளியேறினார் ஆளுநர் ரவி .
இது குறித்து சபாநாயகர் அப்பாவு சட்டமன்றத்தில் கூறுகையில், தேசிய கீதத்தை இசைக்கவில்லை என்று ஆளுநர் ரவி குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார். மேலும், ஆளுநர் தங்கள் மனதில் உள்ளதை சொல்லிவிட்டார். அதேபோல், நாங்களும் எங்கள் மனதில் உள்ளதை சொல்கிறோம். இந்த அவையில் எல்லோரும் மனதில் தோன்றியதெல்லாம் பேச முடியாது. சாவக்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் குறைந்தவர்கள் இல்லை.
இவ்வளவு பெரிய வெள்ளம் புயல் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. ஒரு பைசா கூட மத்திய அரசு தரவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் பிரதமர் மோடி நிவாரண நிதியில் (PM Cares Fund) உள்ளது. இந்திய மக்களால் கணக்கிடப்படாத கணக்கு கேட்க முடியாத பணத்தில் இருந்தாவது ஐம்பதாயிரம் கோடி ரூபாயை ஆளுநர் வாங்கி தந்தால் நன்றாக இருக்கும். ஆளுநர் ரவியுடம் முழு உரையும் அன்றே கொடுக்கப்பட்டு விட்டது.
அவருடைய ஒப்புதல் பெற்று தான் அவைக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், அதை அவர் முழுமையாக வாசிக்கவில்லை. இங்கு ஆளுநர் மாண்புடன் நடந்துகொள்ள வேண்டும். என்பதை நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று கூறி ஆளுநர் பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசு அளித்த ஆளுநர் உரை தான் அவை குறிப்பில் பதிவு செய்யப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருந்தார்.
இந்த முரண்பாடுகளை அடுத்து ஆளுநருக்கு ஆதரவாகவும், ஆளுநருக்கு எதிராகவும் பல்வேறு கருத்துக்களை சட்டமன்ற உறுப்பினர்கள் கூறினார்கள். இந்த நிலையில் தான் ஆளுநர் ஆர்.என்.ரவி சமூக வலைத்தளத்தில் தான் பேசிய வீடியோ என சட்டப்பேரவையில் 3 நிமிடங்கள் தான் பேசிய முழு வீடியோவையும் பதிவிட்டு உள்ளார்.
மதிப்பிற்குரிய சட்டப்பேரவை தலைவர் அவர்களே, மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே, மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர்களே அனைவருக்கும் வணக்கம். இந்த ஆண்டுக்கான சட்டமன்ற தொடக்க உரையை இந்த மகாசபையில் ஆற்றுவது எனது பெருமை. அனைவருக்கும் எனது அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் மகிழ்ச்சியும் செழிப்பும் நல்வாழ்வும் இறைவன் தர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
தொலைநோக்கு பார்வையை உள்ளடக்கிய திருவள்ளுவரின் அழியாத வார்த்தைகளை நினைவு கூர்ந்து எனது உரையை தொடங்குகிறேன். நோயில்லா வாழ்வு, அறுவடை மிகுதி, பொதுமகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பு இந்த ஐந்தும் ஒரு நாட்டின் அழகு. நண்பர்களே தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை காட்டவும் உரையில் தொடக்கத்திலும் முடிவிழும் அதனை இசைக்க வேண்டும். அது பலமுறை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்த உரையில் பல பத்திகள் உள்ளன. அதில் நான் உண்மை அடிப்படையில் அதில் நான் உடன்படவில்லை. நான் அவர்களுக்கு குரல் கொடுப்பது அரசியலமைப்பு கேலிக்கூத்து ஆகும். எனவே இந்த சபை பொறுத்தவரை எனது உரையை முடிக்கிறேன். இந்த சபையில் மக்களின் நலனுக்காக பயனுள்ள மற்றும் ஆரோக்கியமான விவாதமாக அமைய வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்நாடு. வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த் ஜெய் பாரத் நன்றி என அந்த வீடியோவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.