குப்பைகளை கையாளுவதில் சிக்கல்… தகுதியில்லாத நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்… தடுமாறும் கோவை மாநகராட்சி…!!

Author: Babu Lakshmanan
13 பிப்ரவரி 2024, 2:55 மணி
Quick Share

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகாரமாகும் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக 34 நுண் உர தயாரிப்பு மையங்கள் (MCC) நிறுவப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் 12 மையங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருப்பதாகவும், இதனால் குப்பைகளை அகற்றும் பணிகள் மெத்தனமாக நடந்து வருவதாகவும் அடுத்தடுத்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதற்கு மறுப்பு தெரிவித்த கோவை மாநகராட்சி நிர்வாகம் 34 நுண் உர தயாரிப்பு மையங்களும் முறையாக செயல்பட்டு வருவதாக விளக்கம் அளித்திருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக கோவை மாநகராட்சிக்குட்பட்ட நுண் உர தயாரிப்பு மையங்கள் செயல்படாமல் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

அந்த வகையில், துடியலூர் சந்தையின் வளாகத்தில் நாள்தோறும் 4.5 டன் மக்கும் குப்பைகளை கையாளும் விதமாக, அமைக்கப்பட்டுள்ள நுண் உர தயாரிப்பு மையம் கடந்த ஜனவரி மாதத்துடன் செயல்பாட்டை நிறுத்தியுள்ளது. ஆனால், பிப்ரவரி 9ம் தேதி வரை அந்த மையம் செயல்பட்டதாக அதிகாரிகள் ரெக்கார்டை தயார் செய்து வைத்துள்ளனர். இது தொடர்பாக புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நுண் உர தயாரிப்பு மையத்தின் பணியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அதேபோல, ராமசாமி நகரில் அமைந்துள்ள நுண் உர தயாரிப்பு மையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் செயல்படவில்லை. இதனால், பொங்கல் பண்டிகையால் உருவான குப்பைகள் மலைபோல் தேக்கமடைந்துள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

சொக்கம்புதூரில் நாளொன்றுக்கு 10 டன் குப்பைகள் கையாண்டு வருவதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், அங்குள்ள இயந்திரங்கள் நாளொன்றுக்கு 5 டன் குப்பைகளை மட்டுமே கையாளும் திறனை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம், கோவையில் குப்பை மேலாண்மை திட்டப் பணி குறித்து அதிகாரிகள் பொய்யான களநிலவரங்களை வழங்கி வருவதாகவும், தகுதியே இல்லாத தனியார் நிறுவனங்களுக்கு டெண்டரை வழங்கியதுதான் இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது, கடந்த 2020ம் ஆண்டு குப்பைகளை தரம் பிரித்து அகற்றுவது தொடர்பாக, அனுபவம், தொழில்நுட்பம், வேலையை செயல்படுத்தும் முறை மற்றும் பரிந்துரை உள்ளிட்ட பல்வேறு அடிப்படையில் கோவை மாநகராட்சி ஒப்பந்தம் கோரியது. ஆனால், இதில் எந்தத் தகுதியோ, திறனோ இல்லாத தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இதன் காரணமாக, கோவை மாநகராட்சியில் குப்பைகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

உக்கடம் பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் பணியில் முன் அனுபவமில்லாத நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. பெரிய மாநகராட்சிகளில் பணியாற்றிய எந்த முன் அனுபவமும் இல்லாத அந்த நிறுவனம், தொடங்கிய 2 மாதங்களில் இந்த டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு டெண்டரை வழங்கி, முறையாக குப்பைகளை அகற்றி, எந்த இடையூறும் இல்லாமல் பொதுமக்கள் வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  • Manickam Tagore விஜய்யால் கட்சியின் கூடாரம் காலியாகிறதா? காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து பதில்!
  • Views: - 340

    0

    0