சட்டசபையில் ஓபிஎஸ் இருக்கை மாற்றம்… நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆர்பி உதயகுமாருக்கு துணைத்தலைவர் இருக்கை ஒதுக்கீடு
Author: Babu Lakshmanan14 February 2024, 11:31 am
சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ஜுலை மாதம் 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்கட்சி துணைத் தலைவர் பதவி ஆர்பி உதயகுமாருக்கு வழங்கப்பட்டது. மேலும், சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கையை ஆர்பி உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கை எதிர்கட்சி தலைவரின் இருக்கைக்கு அருகிலேயே வேண்டும் என்றும் சபாநாயகர் அப்பாவுவுக்கு அதிமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டது.
அதிமுகவின் இந்தக் கோரிக்கை மீது சபாநாயகர் அப்பாவு எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில், , எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கை எதிர்கட்சி தலைவரின் இருக்கைக்கு அருகிலேயே வேண்டும் என்றும், இதுதான் மரபு என்றும் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
எதிர்கட்சி தலைவரின் கோரிக்கை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகர் அப்பாவுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்பி உதயகுமாருக்கு ஒதுக்கி சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். சட்டப்பேரவையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கு அருகில் அமர்ந்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, எதிர்கட்சிகளின் 2வது வரிசையில் ஓபிஎஸ்-க்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், கட்சியிலும் சரி, சட்டசபையில் சரி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு அடிமேல் அடி விழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.