பச்சை பொய் சொல்லும் திமுக… விஞ்ஞானப்பூர்வமாக கூட நிறைவேற்ற முடியாத திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் ; இபிஎஸ் குற்றச்சாட்டு
Author: Babu Lakshmanan15 February 2024, 1:38 pm
திமுக தேர்தல் அறிக்கையில் விஞ்ஞானப்பூர்வமாக கூட நிறைவேற்ற முடியாத அளவிற்கு கவர்ச்சிகர வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- திமுக தலைமையிலான 33 மாத ஆட்சியில் வெவ்வேறு காரணங்களுக்காக 52 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. திமுக அரசு அமைத்த 52 குழுக்கள் என்ன செய்கின்றன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது ; விலைவாசி உயர்வு தொடர்பாக பட்டியலிட்டோம் ; அரசிடம் பதில் இல்லை. கட்டுமானப் பொருட்கள் விலை உயர்ந்து, கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது ; இதை பட்டியலிட்டோம், பதில் இல்லை. கர்நாடகாவிடம் இருந்து காவிரியில் முறையாக, உரிய தண்ணீரை பெறாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
520 தேர்தல் வாக்குறுதிகளில் 97% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக திமுகவினர் பச்சை பொய் சொல்கின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில் விஞ்ஞானப்பூர்வமாக கூட நிறைவேற்ற முடியாத அளவிற்கு கவர்ச்சிகர வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. ஆரம்ப சுகாதார நிலையங்களை எனது ஆட்சியில் திறக்கவில்லை என்றார்கள் ; அதை நான் மறுக்கிறேன்.
அதிமுக தலைமையிலான ஆட்சியின் போது 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டன. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானது. சட்டமன்றத்தில் நான் பேசுவதை நேரலையில் ஒளிபரப்புவதில்லை ; அந்த வீடியோ காட்சிகளை கூட கொடுப்பதில்லை. பேரவையில் நேற்று நான் ஒன்றரை மணிநேரம் பேசிய பேச்சுகளின் காட்சிகளை ஒளிபரப்பவில்லை ; வழங்கவும் இல்லை.
திமுக அரசு 33 மாதங்களில் ரூ.2.47 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர் ; என்ன புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். மெட்ரோ 2ம் கட்ட பணிகள், நிதி ஒதுக்கீடு தொடர்பான விபரங்களையும், விளக்கங்களையும் கேட்டோம் ; இன்னும் தரவில்லை. எதிர்கட்சியாக மக்கள் பிரச்சனையை சுட்டிக்காட்டுவது எங்களின் கடமை, எனக் கூறினார்.