மாமூல் கேட்டு மிரட்டிய காவலர் தற்கொலை முயற்சி… அதிரடிப்படைக்கு மாற்றியதால் விரக்தி!!!
Author: Udayachandran RadhaKrishnan16 February 2024, 6:15 pm
மாமூல் கேட்டு மிரட்டிய காவலர் தற்கொலை முயற்சி… அதிரடிப்படைக்கு மாற்றியதால் விரக்தி!!!
குமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் கணேஷ்குமார். கொல்லங்கோடு காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்து வந்தது.
இந்த நிலையில் கொல்லங்கோடு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கக்கூடிய மண்ணெண்ணைய்களை அதிக விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி செல்லும் கடத்தல் கும்பல்களை தெரிந்துகொண்டு அவர்களிடம் போய் மாமூல் கேட்டு மிரட்டி வந்ததோடு மாமூல் கொடுக்கமால் கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்களின் வாகனங்களை பிடித்தும் மிரட்டி வந்ததோடு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களையும் மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த மீனவ மக்கள் பங்கு தந்தையர்கள் உதவியுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் கணேஷ்குமாரின் மீது நடவடிக்கை மேற்கொண்டு அதிரடிபடைக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதனால் விரக்தியடைந்த கணேஷ்குமார் நேற்று முதல் வீட்டிற்கு செல்லாமல் மதுபோதையில் காவலர் தங்கும் விடுதியில் தங்கி இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை அவரது அறையை காவலர்கள் திறந்து பார்த்தபோது மதுவில் விஷம் கலந்து குடித்தபடி கிடந்துள்ளார் இதனையடுத்து போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின் அவரது உறவினர்கள் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் காவலர் குடியிருப்பில் தங்கி இருந்த காவலர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.