3 வருஷத்துல 60,567 பேருக்கு வேலையா..? கணக்கு எங்கேயோ இடிக்குதே… CM ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி!!

Author: Babu Lakshmanan
17 February 2024, 12:51 pm

மொத்தம் 1.30 கோடி பேர் அரசு வேலைகளுக்காக காத்திருக்கும் நிலையில், அரசு வேலைகளை வழங்குவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27,858 பேருக்கு வேலை வழங்கப் பட்டிருப்பதாகவும், மொத்தமாக 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசும்போது முதல்-அமைச்சர் தெரிவித்த இந்த எண்ணிக்கை மிகவும் குறைவுதான் என்றாலும் கூட, உண்மையாகவே இவ்வளவு பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சிதான். ஆனால், முதல்-அமைச்சர் வெளியிட்ட புள்ளி விவரங்களில் உள்ள முரண்பாடுகள்தான் ஐயத்தை ஏற்படுத்துகின்றன.

சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதி பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘தி.மு.க.வின் இரண்டாண்டு ஆட்சியில் 12 ஆயிரத்து 576 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது 10 ஆயிரத்து 205 நபர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு அரசுப் பணிக்கு இன்னும் எவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

டி.என்.பி.எஸ்.சி தொகுதி 2 பணிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டாலும் பிற நடைமுறைகள் இன்னும் நிறைவடையவில்லை. பிற பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 1,598 பேருக்கு இப்போதுதான் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அப்படியானால், எங்கிருந்து 60 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டன? என்பது குறித்து தமிழக அரசு விளக்க வேண்டும்.

முதலமைச்சர் குறிப்பிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால் கடந்த 3 ஆண்டுகளில் 24,879 பேருக்கு மட்டும்தான் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாக 24,879 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழக அரசு பொறுப்பேற்றபோது இருந்ததை விட இப்போது அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஐந்தாண்டுகளில் ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை, ஐந்தாண்டுகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப ஒரு லட்சம் பேருக்கு வேலை என மொத்தம் ஆறரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை மூன்றரை லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் 10% அளவுக்குக் கூட அரசு வேலை வழங்கப்படவில்லை.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அரசுத்துறைகளில் புதிதாக ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் கூட இன்னும் நிரப்பப்படவில்லை. எந்தத் துறையிலும் புதிய பணியிடங்களும் உருவாக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து 70 லட்சம் பேர், பதிவு செய்யாமல் 60 லட்சம் பேர் என மொத்தம் 1.30 கோடி பேர் அரசு வேலைகளுக்காக காத்திருக்கும் நிலையில், அரசு வேலைகளை வழங்குவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது, என தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 259

    0

    0