விஜய் விரும்பி கேட்டாலும் செய்ய மாட்டேன்… தடாலடியாக அறிவித்த பிரசாந்த் கிஷோர்… அதிர்ச்சியில் தமிழக வெற்றிக் கழகம்..!!
Author: Babu Lakshmanan22 February 2024, 11:18 am
விஜய்க்கு அரசியல் ஆலோசகராக மாட்டேன் என்று பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பது தமிழக வெற்றிக் கழகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரும் மார்ச் 9ம் தேதி வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஏப்ரல் மாதத்தின் 2வது வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணி, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என்று 4 முனை போட்டி நிலவும் என்று தெரிகிறது.
அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்து விட்டார். மேலும், யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவது இல்லை என்று கூறிய அவர், தங்களின் இலக்கு 2026 சட்டப்பேரவை தேர்தல் தான் என்று தெள்ளத் தெளிவாக கூறி விட்டார்.
இதையடுத்து, கட்சியின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவது, பூத் கமிட்டி அமைப்பது, உறுப்பினர் சேர்க்கை என 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகத்தை நடிகர் விஜய் ஆயத்தப்படுத்தி வருகிறார்.
இதனிடையே, இந்த நிலையில் நடிகர் விஜய் விரைவில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்திக்க உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. எனவே, பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின் படி, கட்சியை வளர்த்தெடுக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், தேர்தலில் அனுபவமிக்க ஒருவரின் ஆலோசனை தங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இதுகுறித்து பேசிய பிரசாந்த் கிஷோர், “விஜய் என்னை இதுவரை அணுகவில்லை. ஆனால் அவர் உதவி கேட்டால் செய்வேன். என்னை மதித்து வருபவர்களுக்கு என்னால் முடிந்த அட்வைஸ் கொடுப்பேன். ஆனால் விஜய் விரும்பி கேட்டாலும் அவருக்கு முழு நேர அரசியல் ஆலோசகராக மாட்டேன்” என்று தெரிவித்து உள்ளார்.
பிரசாந்த் கிஷோரின் இந்த அறிவிப்பு நடிகர் விஜய்யை மட்டுமின்றி தமிழக வெற்றிக் கழகத்தினருக்கே பேரதிர்ச்சியாக இருக்கும் என்று தெரிகிறது.