குடிபோதையில் கார் விபத்து… திமுக எம்பி மகனை துரத்தி பிடித்தாக வெளியான செய்தி ; உடனே அறிக்கை விட்ட திமுக எம்பி!!!
Author: Babu Lakshmanan24 February 2024, 2:38 pm
குடிபோதையில் கார் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியதாக தன் மகன் குறித்து செய்தி வெளியான நிலையில், திமுக எம்பி கிரிராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை – மாமல்லபுரத்தில் அதிவேகத்தில் வந்த கார் சாலையில் சென்ற இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதாகவும், பொதுமக்கள் காரைத் துரத்திச் சென்று காரை மடக்கி பிடித்த போது, காருக்குள் திமுக, மாநிலங்களவை எம்பி கிரிராஜனின் மகன் செந்தமிழ் மற்றும் அவரது பெண் தோழிகள் போதையில் இருந்ததாக பிரபல தினசரி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக எம்பி கிரிராஜன் விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இன்று 24.02.2024 தேதியிட்ட ஒரு காலை தினசரி பத்திரிக்கையில் பக்கம் 13ல் “போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய MP மகனை துரத்தி பிடித்த மக்கள்”?
என என்னுடைய மகன் திரு.செந்தமிழ் குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது, இதுகுறித்து உண்மை நிலையை நான் தெரிவிக்க கடமைபட்டுள்ளேன்.
கடந்த 22.02.2024 அன்று காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார்
சட்டக்கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் இறுதியாண்டு முடிவதை முன்னிட்டு மாமல்லாபுரம் கடற்கரை கோயிலுக்கு சென்று அங்கிருந்து திருக்கழுகுன்றம் சாலை வழியாக செங்கல்பட்டிற்கு வரும் போது, அந்த பகுதியை
சார்ந்த இரு சக்கர வாகன ஓட்டிகள், மாணவர்களின் காரை முந்தி ஓட்ட முயன்ற போது ஏற்பட்ட சிறு விபத்தின் காரணமாக, இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் கற்களை எடுத்து எறிந்து என் மகனின் காரின் பின்புறம் அடித்ததில் பின்புற
கண்ணாடி உடைந்து விட்டது.
இதை “காலை பத்திரிக்கை” வெளியிட்ட படத்திலேயே காணலாம், இது குறித்து காவல் துறையினரிடம், என் மகன் முறையிடுவதையும் படத்தில் காணலாம், இது குறித்து இரு தரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டுவிட்ட நிலையில், காவல்துறை அதிகாரியிடம் என் மகன் விபத்து சம்பவம் குறித்து தெரிவிக்கும் பொழுதில், யாரோ எடுத்த புகைப்படத்தினை வேண்டும் என்றே வெளியிட்டுள்ளது.
சுமார் 42 ஆண்டு காலம் எந்தவிதமான களங்கமும் தி.மு.கழகத்திற்கு எற்படுத்தாமல் செயல்பட்டு வரும் என் மீது வேண்டும் என்றே “அந்த காலை பத்திரிகை” உண்மையை சற்றும் ஆராயாமல், என் மகனின் எதிர்காலத்தை பற்றி சிறுதும் கவலை படாமல் தி.மு.க. குடும்பம் என்ற ஓரே நோக்கத்தில் களங்கம் கற்பித்து செய்தி வெளியிட்டுள்ளது.
என்னுடைய மகனின் பெயருக்கும் நடத்தைக்கும் என் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் “செய்தி வெளியிட்ட காலை பத்திரிகை மீது சட்ட ரீதியான
நடவடிக்கை மேற்கொள்வேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.