சீட்களை பெறுவதில் காங். முரண்டு?… தொகுதி பங்கீட்டில் திணறும் திமுக!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2024, 9:25 pm

2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்படவில்லை. அப்போது கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் திருப்தி அடையும் விதமாக தொகுதி பங்கீட்டை திட்டமிட்டபடி முடித்து தேர்தல் பிரச்சாரத்தை முன்னதாகவே திமுக தொடங்கியும் விட்டது.

ஆனால் இப்போதோ நிலைமை தலைகீழாக உள்ளது. காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவற்றுடன் இரண்டாம் கட்ட பேச்சு முடிந்தும் கூட எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இழுபறி நிலையே நீடிக்கிறது.

தற்போது இந்த பேச்சு வார்த்தை மார்ச் முதல் வாரம் வரை நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதிலொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தனது பிறந்த நாளான மார்ச் 1ம் தேதிக்குள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை திருப்திகரமாக முடித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட வேண்டும் என்பது முதலமைச்சர் ஸ்டாலினின் திட்டமாக இருந்தது.

ஆனால் விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மூன்று கட்சிகளும் நான்கு தொகுதிகளுக்கான விருப்ப பட்டியலை திமுக தலைமையிடம் அளித்துவிட்டு, அதில் மூன்றை கண்டிப்பாக தங்களுக்குவேண்டும் என்று அடம் பிடிக்கின்றன.

சென்ற தேர்தலில் மதுரை, கோவை தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற மார்க்சிஸ்ட் இம்முறை இந்த சீட்களுடன் சேர்த்து திருச்சி அல்லது சிவகங்கை தொகுதியை ஒதுக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறது. ஆனால் இதற்கு திமுக சம்மதிக்கவில்லை. கோவையில் எங்கள் கட்சி வேட்பாளர் நிறுத்தப்பட இருக்கிறார். அதனால் கோவையை எதிர்பார்க்காதீர்கள். மதுரையுடன் சேர்த்து கடலூர் தொகுதியை தருகிறோம் என்று கறாராக கூறிவிட்டதாக தெரிகிறது.

இதேபோல நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகளில் கடந்த முறை வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மிக அண்மையில் திமுகவிடம் நடத்திய இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் ஏற்கனவே வெற்றி பெற்ற இடங்களுடன், கூடுதலாக தென்காசி தொகுதியையும் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் டி ஆர் பாலு தலைமையிலான திமுக தொகுதி பங்கீட்டு பேச்சு குழு இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனான பேச்சும் மூன்றாம் கட்டத்திற்கு சென்றுவிட்டது.

திமுகவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் எம்பி சுப்பராயன் கூறும்போது மார்ச் 3ம் தேதி ஒப்பந்தம் ஏற்பட்டு விடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

விசிகவோ பேச்சுவார்த்தையை தொடங்கும் முன்பாக திமுகவிடம் சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 7 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தது. இதில் இரண்டு தனித் தொகுதிகளையும் கள்ளக்குறிச்சி பொதுத் தொகுதியையும் தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று அடம் பிடித்தும் வருகிறது. திமுகவோ நீங்கள் கேட்பது போல் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளை ஒதுக்குகிறோம். உங்கள் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டுக் கொள்ளுங்கள். கள்ளக்குறிச்சியில் திமுகவின் சின்னத்தில் போட்டியிட தயார் என்றால் அந்தத் தொகுதியையும் தருகிறோம் என்று கிடுக்குப் பிடி போட்டுள்ளது.

இதனால் விசிகவின் துணைப் பொதுச் செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனும், இந்திய பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவருமான ஆதவ் அர்ஜுனாவுக்கு கள்ளக்குறிச்சி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இத் தொகுதியின் தற்போதைய எம்பியாக உள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்பது இதன் மூலம் உறுதியாக தெரிய வருகிறது. இதனால் ஏற்கனவே மத்திய அமலாக்கத்துறையால் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்ட சீனியர் தலைவரான பொன்முடியை சமாதானப்படுத்துவதற்குள் ஸ்டாலினுக்கு போதும் போதும் என்றாகிவிடும்.

இது ஒருபக்கம் இருக்க மூன்று தொகுதிகளிலும் பானை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று வெளிப்படையாக கூறிய திருமாவளவன் இதை ஏற்றுக் கொள்வாரா என்பது தெரியவில்லை. பிப்ரவரி 28ம் தேதி நடக்கவிருக்கும் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் திமுக- விசிக இடையே தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக காங்கிரசின் நிலையோ சென்னையில் ஒரு பேச்சு டெல்லியில் வேறொரு பேச்சு என முற்றிலும் முரண்பாடாக உள்ளது.

திமுக-காங்கிரஸ் இடையே நடந்த முதல் கட்ட பேச்சு வார்த்தையில் ஐந்து தொகுதிகளுக்கு மேல் நீங்கள் எதிர்பார்க்காதீர்கள் என்று டி ஆர் பாலு கூறியதாக வெளியான தகவலால் சோனியா, ராகுல் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிப்ரவரி 13ம் தேதி சென்னைக்கு வந்து திமுக தலைவர் ஸ்டாலினுடன் நேரடியாக பேச்சு நடத்தி தொகுதி பங்கீட்டை சுமுகமாக முடிப்பார் என்று டெல்லி மேலிட காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கார்கே வருவதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் பிப்ரவரி 17ம் தேதி சென்னை வருவார் என்று கூறப்பட்டது.

ஆனால் கடைசிவரை கார்கே சென்னை வரவே இல்லை. இந்த நிலையில்தான் தமிழக காங்கிரசுக்கான டெல்லி மேலிட பார்வையாளர் அஜோய் குமார், கடந்த 22 ம் தேதி சென்னைக்கு வந்து முதலமைச்சர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் பத்து நிமிடம் சந்தித்து பேசினார். அப்போது மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை அருகில் வைத்துக் கொண்டே கடந்த தேர்தலில் ஒதுக்கியதுபோல் தமிழகத்தில் எங்களுக்கு ஒன்பது தொகுதிகளை கொடுத்தாலே போதும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆனால் இது தொடர்பாக நீங்கள் டி ஆர் பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்து பேசுங்கள் என ஸ்டாலின் கூறிவிட்டு நைசாக ஒதுங்கி கொண்டு விட்டார், என்கிறார்கள்.

இந்த நிலையில்தான் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் உத்தரப்பிரதேசம், டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொகுதி பங்கீட்டை காங்கிரஸ் சுமுகமாக முடித்துவிட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் ஏன் இழுபறி நீடிக்கிறது என்பது புரியாமல் தவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை உடனடியாக டெல்லிக்கு வரவழைத்து பிப்ரவரி 26ம் தேதியன்று சுமார் 40 நிமிடங்கள் பேசியிருக்கிறார். அப்போது அவர் இன்னும் ஏன் தொகுதி பங்கீட்டை முடிக்கவில்லை என்று செல்வபெருந்தகையிடம் எரிச்சலை காட்டியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை, “நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தொடர்பாகவும் அதற்கான வேட்பாளர் மற்றும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் வகுப்பது குறித்தும் பேசினோம். திமுக கூட்டணியில் கடந்த முறை பெற்ற தொகுதிகளை விட அதிகம் கேட்டு பெறுவோமே தவிர நிச்சயம் குறைந்த அளவிலான தொகுதிகளை பெற மாட்டோம்” என்று குறிப்பிட்டார்.

அவர் சொல்வதைப் பார்த்தால் தமிழகத்தில் மட்டும் 10 தொகுதிகளுக்கும் குறையாமல் வாங்கிவிடுவார் என்று அர்த்தமாகிறது. ஒருவேளை இத்தனை தொகுதிகளை திமுகவிடம் பெற முடியாமல் போய்விட்டால் செல்வப் பெருந்தகையின் பாடு திண்டாட்டத்திற்கு உள்ளாகிவிடும். தமிழக அரசியலில் அவர் ஒரு கேலிப் பொருளாகி விடுவார் என்பதும் நிச்சயம்!

திமுகவைப் பொறுத்தவரை சிறு கட்சிகளுக்கு ஒரு தொகுதியை ஒதுக்குவதில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கும் கட்சிகளால்தான் சிக்கலே வருகிறது.

இதற்கு வேறு சில பின்னணி காரணங்களும் இருப்பதை யூகிக்க முடிகிறது. அதிமுக மெகா கூட்டணியை அமைப்போம் என்று கூறினாலும் இதுவரை அதனுடன் சிறு சிறு கட்சிகள் தவிர பாமக, தேமுதிக போன்ற பெரிய கட்சிகள் எதுவும் இன்னும் இணையவில்லை. ரகசிய பேச்சு வார்த்தையும் இழுத்துக் கொண்டே போகிறது.

அதிமுக கூட்டணியில் இந்த இரு கட்சிகளும் இணைந்து விட்டால், திமுகவுக்கு எதிரான வலுவான கூட்டணியாக அது மாறிவிடும் என்பது நிச்சயம். அதேநேரம் பாஜக அணியில் பாமகவும், தேமுதிகவும் இணைந்தால் அந்தக் கூட்டணியும் மூன்றாவது வலுவான அணியாக உருவாகி விடும் என்று திமுக தலைமை அஞ்சுகிறது.

இதனால் எதிரணிகளின் முகாமில் என்ன நடக்கிறது, ஏதாவது பெரிய அளவிலான மாற்றங்கள் தென்படுகிறதா? என்பதை முழுமையாக தெரிந்துகொண்டு அதன் பிறகு காங்கிரஸ், விசிக மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகளை வழங்கலாமா? அல்லது முந்தைய தேர்தல் போலவே சீட்டுகளை ஒதுக்கலாமா? இல்லை அதையும் விட குறைத்துக் கொடுக்கலாமா? என்று பல்வேறு விதமாக திமுக சிந்திப்பதாக தெரிகிறது.

ஆகையால்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் அறிவாலயம் திணறி வருவதை வெளிப்படையாகவே காண முடிகிறது. திமுக கூட்டணியில் முதல் கட்ட பேச்சுவார்த்தையை கடந்து மூன்றாம் கட்டம் வரை சென்றுள்ளதற்கு இதுதான் முக்கிய காரணமே!

எது எப்படியோ 25 தொகுதிகளில் போட்டியிட்டு வென்று விட வேண்டும் என்று துடிக்கும் திமுகவுக்கு அந்த ஆசை கை கூடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 414

    0

    0