காங்., அலுவலகத்தில் இருந்து ‘துரோகி’ ஜி.கே வாசன் போட்டோவை அகற்றுங்க.. காங்கிரஸ் பிரமுகர் பரபரப்பு வேண்டுகோள்!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2024, 10:03 pm

காங்., அலுவலகத்தில் இருந்து ‘துரோகி’ ஜி.கே வாசன் போட்டோவை அகற்றுங்க.. காங்கிரஸ் பிரமுகர் பரபரப்பு வேண்டுகோள்!

தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொது செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை:- இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட காங்கிரஸ் கட்சி தமிழகத்தின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றி உள்ளது.தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் முழு நேரத்தையும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கும் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் ஒதுக்கி பாடுபட்டார்கள்.

சென்னை சத்தியமூர்த்தி பவன் தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் தியாக உழைப்புக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் கட்டப்பட்டு அவரது பெயர் சூட்டப்பட்டு இன்றும் காங்கிரஸின் பெருமையை தமிழக முழுவதும் பறைசாற்றி கொண்டு வரும் ஒரு வரலாற்று சின்னம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

சத்தியமூர்த்தி பவன் என்று கூறும் போது காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஒரு வித எழுச்சி புத்துணர்ச்சி ஏற்பட்டு மறையும் என்பதை யாரும் மறந்து விட முடியாது.

இந்த நேரத்தில் இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து அரசியல் நடத்தி வரும் காங்கிரஸ் கட்சி வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் அந்த கட்சியை வீட்டுக்கு அனுப்ப கடுமையாக பாடுபட்டு வருகிறது.

ஆனால் ஜி.கே.வாசனுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் பதவி வழங்கியும் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் தேர்தலில் நிற்க்காமல் இரண்டு முறை ராஜ்ய சபா உறுப்பினராக்கி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அமைச்சர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வழங்கி அழகு பார்த்த காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி இழந்தவுடன் துரோகம் விளைவித்து கொண்டு தனி கட்சி ஆரம்பித்து போணி ஆகாமல் இருந்ததினால் தற்போது ஜி.கே.வாசன் வருகிற பாராளுமன்றத் தேர்தலில் பாஜக விரித்த வலையில் விழுந்து ஒரு சில பாராளுமன்ற சீட்டுக்காக அக்கட்சியுடன் கூட்டு சேர்ந்துள்ளார்.

இது எந்த அடிப்படையில் அமைந்த கூட்டணி என்று அவரது கட்சியினரே குழம்பி போய் கொண்டு இருக்கிறார்கள். மேலும் மக்கள் மத்தியில் ஜி.கே.வாசன் அவர்களுக்கு எந்த வித செல்வாக்கும் இல்லை என்பது விரைவில் வெட்ட வெளிச்சம் ஆகும். அவர் கடந்த காலங்களில் தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்த பொழுது அவர் சுட்டிக் காட்டிய இரண்டு பேரை ஒவ்வொரு காலகட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்களாக நியமித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அவருக்கு மதிப்பளித்தது.

ஆனால் ஜி.கே.வாசன் அவர்கள் இவை எல்லாவற்றையும் மறந்து தற்போது பாஜக வலையில் சிக்கி ஒரு சில சீட்டுக்காக பேரம் பேசி கூட்டணி வைத்து உள்ளார். எனவே காங்கிரஸ் கட்சி கொள்கை கோட்பாடுகளுக்கு நேர்மாறாக சென்று விட்ட ஜி.கே.வாசன் அவர்களின் புகைப்படம் இனி மேலும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருப்பது ஏற்புடையது ஆகாது.

எனவே ஜி.கே.வாசன் புகைப்படத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர்களின் வரிசையில் இருந்து உடனடியாக அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கேட்டு கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 255

    0

    0