ஜக்கம்மா சொல்றா.. ஜக்கம்மா சொல்றா : குடுகுடுப்பையுடன் பிரச்சாரம் செய்த திமுக பிரமுகருக்கு அனுமதி மறுப்பு.. போலீசார் எச்சரிக்கை!
Author: Udayachandran RadhaKrishnan28 February 2024, 1:22 pm
ஜக்கம்மா சொல்றா.. ஜக்கம்மா சொல்றா : குடுகுடுப்பையுடன் பிரச்சாரம் செய்த திமுக பிரமுகருக்கு அனுமதி மறுப்பு.. போலீசார் எச்சரிக்கை!
நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் தேர்தலுக்கான கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காணுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக அதிமுக விசிக பாமக போன்ற பல்வேறு கட்சிகள் தெருமுனை பிரச்சாரங்கள் பொதுகூட்டங்களும் நடத்தி நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையம், நான்கு முனை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுகவை சார்ந்த தலைமை கழக பேச்சாளர் கோவிந்தராஜ் என்பவர் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் பாஜக அரசிற்கு வாக்களிக்க கூடாது என்று நூதன முறையில் குடுகுடுப்பை காரர் போல் வேடமிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாக்கு சேகரித்தார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைவரும் நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டுமெனவும், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
அப்போது காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் அனுமதி இல்லாமல் இதுபோன்று பொது இடங்களில் குடுகுடுப்பு அடித்து பொதுமக்களை கூட்டம் கூட செய்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் இப்படி நடக்கக்கூடாது என எச்சரித்தார்.
பின்னர் அவர் தமிழகம் முழுவதும் இது போன்ற பிரச்சாரத்தில் ஈடுபடுவது வழக்கம் யாரும் என்னை தடுத்தது கிடையாது என்று கூறினார். மேலும் திமுக நகர செயலாளர் இடம் அனுமதி பெற்று தான் இந்த பிரச்சாரத்தை செய்து வருகிறேன் என்று கூறினார்.
பின்னர் காவல்துறை உதவி ஆய்வாளர் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.