மத்திய அரசு அனுமதியளித்த பிறகும் சாந்தனை இலங்கைக்கு அனுப்பாதது ஏன்..? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!!
Author: Babu Lakshmanan29 February 2024, 2:36 pm
சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன் அனுப்பவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று, விடுதலையான சாந்தன் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இதனிடையே, நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சாந்தன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் துரதிருஷ்டவசமாக நேற்று உயிரிழந்துவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மத்திய அரசு 22ம் தேதியே சாந்தனை இலங்கைக்கு அனுப்ப அனுமதியளித்த பிறகும், அவரை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், சாந்தன் ஜனவரி 24ம் தேதி முதலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அவரால் நகர கூட முடியவில்லை என தெரிவித்தார்.
இதனையடுத்து, பிற்பகலில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், இலங்கை தூதரக அனுமதி, இறப்புச் சான்று, பயண ஆவணம் ஆகியவற்றை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆவணங்கள் வழங்கப்படும் பட்சத்தில் உடனடியாக உடலை விமானத்தில் அனுப்பி வைப்பதற்கான அனுமதி தாமதமின்றி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.