போதைப்பொருள் கடத்தல்…. செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மீது திமுகவினர் தாக்குதல்… இபிஎஸ் கடும் கண்டனம்…!!
Author: Babu Lakshmanan29 February 2024, 5:58 pm
பத்திரிக்கையாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் எவ்வித அரசியல் அச்சுறுத்தலும் அளிக்காமல், அவர்களின் கருத்து சுதந்திரத்தை உறுதிசெய்யுமாறு இந்த விடியா அரசின் முதல்வரைக் கேட்டுக்கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 2000 கோடி ரூபாய் போதைப்பொருளை திமுக அயலக அணி அமைப்பாளர் ஜாபர் சாதிக் கடத்திய வழக்கின் தொடர்ச்சியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள திமுக மாவட்டச் செயலாளர் சிற்றரசுவின் அலுவலக கட்டிடத்திற்கு கீழ் உள்ள “சகாரா எக்ஸ்பிரஸ்” என்ற கொரியர் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டதாக கிடைத்த தகவலின் பெயரில் அதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் செந்தில் என்பவர், திமுக குண்டர்களால் அறையில் கட்டி வைத்து , கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு என்னுடைய கடும் கண்டனங்கள்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில், திமுகவிற்கு மடியில் கணமில்லை எனில் எந்தவித சோதனை வந்தாலும் அதற்கான முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். மாறாக, திமுகவின் முதல் குடும்பத்திற்கு மிக நெருக்கமான ஒருவர் நம் சந்ததியினரை சிதைத்து, தமிழ்நாட்டு மக்களின் அமைதியான வாழ்வை ஒட்டுமொத்தமாக சீர்குலைக்கும் போதைப் பொருள் கடத்தும் மாபியா தலைவனாக இருந்ததும், இது தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர் அலுவலகத்திற்கு கீழுள்ள கொரியர் அலுவலகத்தில் நடத்தும் சோதனைக்கு திமுக குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
தனியார் செய்தி ஒளிப்பதிவாளர் செந்தில் அவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து எவ்வித வழக்கும் பதியாமல் காலம் தாழ்த்தும் விடியா அரசின் காவல்துறை, உடனடியாக வழக்கு பதிந்து, கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக குண்டர்களை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.
மேலும், தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்து செய்தி சேகரிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும், சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக உள்ளார்ந்த அக்கறையோடு இதுகுறித்து பேசும் ஆர்வலர்களுக்கும் எவ்வித அரசியல் அச்சுறுத்தலும் அளிக்காமல், அவர்களின் கருத்து சுதந்திரத்தை உறுதிசெய்யுமாறு இந்த விடியா அரசின் முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன், எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.