பிரதமர் மோடியின் கால் தூசுக்கு சமன் இல்லாதவர் உதயநிதி… வாரிசு என்பதை தாண்டி அவருக்கு பின்புலம் எதுவும் கிடையாது ; அண்ணாமலை பதிலடி..!!
Author: Babu Lakshmanan1 March 2024, 4:35 pm
பிரதமர் மோடியின் கால் தூசுக்கு சமன் இல்லாதவர் அமைச்சர் உதயநிதி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, இனி திமுக எனும் கட்சியே இருக்காது என்று கூறியிருந்தார். அவரது கருத்திற்கு, திமுகவினர் எதிர்வினையாற்றி வரும் நிலையில், மோடி மட்டுமல்ல, அவரது தாத்தா வந்தாலும் திமுகவை அழிக்க முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது :- கட்சி தலைமை என்னை எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் போட்டியிடுவேன். எனக்கான தனி விருப்பம் என்று எதுவும் கிடையாது; கட்சித் தலைமையின் முடிவுதான் எனது முடிவு.
தேர்தல் பணி செய்ய சொன்னாலும், பிரச்சாரம் மேற்கொள்ள சொன்னாலும் செய்வேன். நான் கட்சியில் எனக்கு என எதுவும் கேட்கவில்லை. எனக்கு கொடுங்க என்றோ கொடுக்காதீங்க என்றோ கேட்கவில்லை. அனைத்தையும் கட்சிதான் முடிவு செய்யும். எங்களது கட்சியில் எனக்கு ஒரு பொறுப்பு கொடுத்துள்ளார்கள்; அதை செய்து கொண்டிருக்கிறேன்.
4-ந் தேதி கல்பாக்கம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து சென்னை ஒய்.எம்.சி.ஏ. பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என வாய்சவடால் விடுகிறார். தாத்தா, தந்தை பெயர் இல்லை என்றால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பின்புலம் கிடையாது. பிரதமர் மோடியை விமர்சிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை, எனக் கூறினார்.