பாஜகவின் பிரச்சார யுக்தி… அதிமுகவுக்கு தான் ரோஷம் வரனும்… எங்களுக்கு அல்ல ; அமைச்சர் துரைமுருகன் பளீச்..!!
Author: Babu Lakshmanan4 March 2024, 4:14 pm
வேலூர் ; ரோஷம் வரவேண்டியது அதிமுக கட்சிக்கு தான், திமுகவுக்கு அல்ல என்றும், அதிமுக முடியாத கட்சி ஆகிவிட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 1 லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வேலூர் காட்பாடியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- மத்திய அரசு மதுரையில் கொண்டு வந்த எய்ம்ஸ் மருத்துவமனையை திமுக தடுக்கவில்லை அதை மத்திய அரசு செயல்படுத்தாமல் விட்டுவிட்டது. திமுக அரசு மீது பழி சொல்வது நியாம் அல்ல.
பா.ஜ.க, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படங்களை போட்டு வாக்கு சேகரிக்க தொடங்கியுள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன் ” ரோஷம் வரவேண்டியது அதிமுக கட்சிக்கு, திமுக வுக்கு அல்ல. அதிமுக முடியாத கட்சி ஆகிவிட்டது. கோள் ஊன்றிதான் நடப்பார்கள். அதிமுக தலைவர்களின் படங்களை பா.ஜ.க மிஸ்யூஸ் பண்ணுகிறது என்றால் அதற்கு அதிமுக தான் கோவப்படவேண்டும் திமுக அல்ல, என்றார்.
பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறாரே என்ற கேள்விக்கு, ” தேர்தல் சமயத்தில் வரத்தான் செய்வார்கள். ஜல்லிக்கட்டு காலத்தில் வண்டிமாடுகள் கூட தலையாட்டும், அது அப்படித்தான், என்றார்.