மாயமான சிறுமி சாக்கடையில் சடலமாக மீட்பு… கை, கால்களை கட்டி சாக்கு மூட்டையில் வீசிச் சென்ற கொடூரம்…!!

Author: Babu Lakshmanan
5 March 2024, 5:10 pm

புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி வீட்டின் அருகே சாக்கடையில் வீசி சென்ற கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியை சேர்ந்தவர் நாராயணன். ஓட்டுனரான இவரது மகள் ஆர்த்தி. ஒன்பது வயதான இவர், அங்கு உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, ஆர்த்தி திடீரென காணாமல் போனார்.

மேலும், வழக்கமாக விளையாடிவிட்டு வீட்டிற்கு மகள் வருவாள் என்று எதிர்பார்த்து இருந்த பெற்றோர்கள், மகள் வராததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை தேடும் பணியை துவக்கினர். ஆனால் சோலை நகர் முழுவதும் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகள் அனைத்தையும் ஆய்வு செய்தனர். அதில் சிறுமி தனியாக நடந்து செல்லும் வீடியோ பதிவாகியிருந்தது. கடந்த 4 தினங்களாக சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன சிறுமியின் உடலை கை, கால்களை கட்டி சாக்கு மூட்டையில் கட்டி, அவரது வீட்டருகே உள்ள சாக்கடையில் போட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சிறுமி கை கால்கள் கட்டப்பட்டு சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறியும், குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரி பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமுக்கள் முத்தியால்பேட்டை மணிகூண்டு அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதனையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 740

    0

    0