தமிழக அரசை விமர்சித்த அரசுப்பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம்.. இதுதான் உங்கள் கருத்து சுதந்திரமா..? என கிளம்பிய எதிர்ப்பு..!!!
Author: Babu Lakshmanan8 March 2024, 2:21 pm
தமிழக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறி அரசுப்பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் உமா மகேஸ்வரி. பள்ளிக் கல்வியில் நிகழும் சிக்கல்கள் குறித்தும் கல்வித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றியும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்.
அதேபோல, தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் கல்வித்துறையில் நிலவும் சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து ஆசிரியை உமா மகேஸ்வரி வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்வதாக செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு அரசுக்கும். பள்ளிக் கல்வித்துறைக்கும் எதிராக ஆசிரியர் உமா மகேஸ்வரி தனது ஃபேஸ்புக், வாட்ஸ் அப் பக்கங்களில் எழுதி வருகிறார். இது அரசு ஊழியர்கள் மத்தியில் உணர்ச்சிகளைத் தூண்டி பொதுமக்களின் அமைதியைக் குலைக்கும் விதமாக உள்ளது. இது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளுக்கு எதிரான செயல் ஆகும். இதனால் ஆசிரியர் உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். மார்ச் 6ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.
விதிகளின்படி பிழைப்பூதியமும் அகவிலைப்படியும் ஆசிரியர் உமா மகேஸ்வரிக்கு வழங்கப்படும், ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு சக ஆசிரியர்கள், கல்வி செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர். ஜனநாயக நாட்டில் கருத்துரிமைக்கு சுதந்திரம் கிடையாதா? என்றும், அரசை விமர்சிப்பது பணியிடை நீக்கம் செய்ய வேண்டிய அளவுக்குப் பெரிய குற்றமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டம் தெரிவித்துள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர் மணியன், சட்டநெறிமுறைப்படி, குற்றக் குறிப்பாணைகள் கொடுத்து, முறையான விசாரணை ஏதும் நடத்தாமல், நேரடியாக பணியிடை நீக்கத் தண்டனையை ஆசிரியர் உமா மகேஸ்வரிக்கு வழங்கியிருப்பது, முற்றிலும் சட்ட விரோதமானது மட்டுமின்றி, இதுபோல் மற்ற ஆசிரியர்கள் யாரும் மாணவர்களின் கல்வி உரிமை குறித்து, துணிச்சலாகப் பேசக் கூடாது என அச்சுறுத்துகிற முயற்சி.
மக்களின் பேச்சுரிமையைப் பாதுகாக்க வேண்டிய கல்வித்துறை, முகநூல் பதிவுக்காக பணியிடை நீக்கம் செய்வது அப்பட்டமான மனித உரிமை மீறல், என தெரிவித்தார்.